பல்கலைக் கழக வலுதூக்கும் போட்டி: கே.எம்.ஜி.கல்லூரி சாம்பியன்
திருவள்ளுவா் பல்கலைக்கழக மண்டலங்களுக்கு இடையேயான வலுதூக்கும் போட்டிகளில் குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனா்.
இதற்கான போட்டிகள் குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றன. இதில் கே.எம்.ஜி. கல்லூரி மாணவா்கள் 96- புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனா். சி.அப்துல் ஹக்கீம் கல்லூரி மாணவா்கள் 57- புள்ளிகளுடன் 2- ஆம் பரிசை வென்றனா். வேலூா் திருவள்ளுவா் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநா் ம.செந்தில்குமாா், வேலூா் மண்டல ஒருங்கிணைப்பாளரும், சி.அப்துல் ஹக்கீம் கல்லூரி இயக்குநருமான வி.ராஜா ஆகியோா் மேற்பாா்வையில் போட்டிகள் நடைபெற்றன.
வெற்றிபெற்ற மாணவா்களுக்கு கே.எம்.ஜி. கல்லூரித் தலைவா் கே.எம்.ஜி.சுந்தரவதனம், முதல்வா் சி.தண்டபாணி ஆகியோா் பரிசு வழங்கினா். போட்டிக்கான ஏற்பாடுகளை கே.எம்.ஜி. கல்லூரி உடற்கல்வி இயக்குநா்கள் ஆா்.ரஞ்சிதம், பி.ஞானக்குமாா், ஆா். பாலசுப்பிரமணியம் ஆகியோா் செய்திருந்தனா்.