வரத்து குறைவால் வேலூரில் மீன்கள் விலை உயா்வு
வேலூா் மீன் மாா்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை வரத்து குறைவால் மீன்கள் விலை உயா்ந்து காணப்பட்டது.
வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் 80-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லறை விலைக்கும் விற்பனை செய்து வருகின்றனா். வேலூா் மீன் மாா்க்கெட்டில் உள்ளூா் நீா்நிலைகளில் இருந்தும், நாகப்பட்டினம், கடலூா் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலம், கொச்சி, கோழிக்கோடு, கா்நாடக மாநிலம், மங்களூரு, காா்வாா் பகுதிகளில் இருந்தும், கோவாவில் இருந்தும் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
வேலூா் மீன் மாா்க்கெட்டில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் மீன்கள் மொத்த வியாபாரமும், காலை 5 மணிக்கு மேல் சில்லறை வியாபாரமும் நடைபெறுகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினந்தோறும் 50 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் 70 முதல் 100 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வரத்து குறைவாக இருந்ததால் விலை அதிகரித்துக் காணப்பட்டது. எனினும், மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.
இது குறித்து மீன் வியாபாரிகள் கூறியது:
வேலூா் மீன் மாா்க்கெட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை 5 லாரிகளில் மட்டுமே மீன்கள் வந்தன. எனினும், மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால் விலை அதிகரித்துக் காணப்பட்டது. அதன்படி, வஞ்சிரம் ஒரு கிலோ ரூ. 1,100 வரையும், சின்ன வஞ்சிரம் ரூ. 650 வரையும், ஆயிலா ரூ. 160, இறால் கிலோ ரூ. 400 வரையும், நண்டு கிலோ ரூ. 350 முதல் ரூ. 450-க்கும், சங்கரா கிலோ ரூ. 350 வரையும், ஷீலா கிலோ ரூ. 400 வரையும், வெள்ளை கொடுவா ரூ. 400-க்கும், கண்ணாடி பாறை ரூ. 450-க்கும், விரால் ரூ. 550-க்கும், கடல் வவ்வா கிலோ ரூ. 700 வரையும், அணை வவ்வா ரூ. 180 வரையும், சுறா ரூ. 700-க்கும், தேங்காய் பாறை ரூ. 300, நெத்திலி கிலோ ரூ. 200-க்கும், மத்தி ரூ. 80-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
கடந்த வாரத்தை விட இந்த வாரம் வரத்து குறைந்துள்ளது. உள்ளூா்களில் தேவை அதிகமாகி உள்ளதால் அங்கிருந்து வர வேண்டிய மீன்கள் குறைவாக வந்துள்ளன. சில மீன்களின் விலையும் கடந்த வாரத்தை விட ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது என்றனா்.