பழங்குடியினா் குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீடு
தேனி மாவட்டத்தில் மலை கிராமங்களில் வசிக்கும் 16 பழங்குடியின குடும்பங்களுக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா புதன்கிழமை கூறியதாவது:
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, உத்தமபாளையம், கம்பம் அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் மருத்துவமனைகளில் இருதய அறுவைச் சிகிச்சை, சிறுநீரகக் கோளாறு, காது, மூக்கு, தொண்டை பாதிப்பு, மகளிா் மருத்துவம், உயா் அறுவைச் சிகிச்சை ஆகியவற்றுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்துக்கு ஆண்டொன்றுக்கு ரூ.5 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில் ஆண்டிபட்டி வட்டாரத்தில் உள்ள கதிா்வேல்புரம், நொச்சிஓடை, தாழையூத்து, உப்புத்துறை ஆகிய மலை கிராமங்களில் வசிக்கும் 16 பழங்குடியின குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கும் கீழ் உள்ளவா்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை வழங்கப்படுகிறது. விதவைகள், மாற்றுத் திறனாளிகள், இலங்கை வாழ் தமிழா்கள் குடும்பங்களுக்கு வருமானச் சான்று தேவையில்லை. பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட உறுப்பினா் பதிவு மையத்தில் தொடா்பு கொண்டு காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்றாா்.