திண்டுக்கல் நகைக் கடை உரிமையாளா்கள் வீடு, கடைகளில் வருமான வரித் துறையினா் சோதனை
பாஜக ஆட்சியில் விளிம்புநிலை மக்கள் மீது வன்கொடுமை அதிகரிப்பு- காா்கே சாடல்
‘சமூகத்தில் விளிம்புநிலையில் உள்ள மக்களுக்கு எதிரான மனநிலையுடன் மத்திய-மாநில பாஜக அரசுகள் செயல்படுகின்றன; அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான பாஜக ஆட்சியில் விளிம்புநிலை மக்கள் மீதான வன்கொடுமை அதிகரித்துள்ளது’ என்று காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.
இது தொடா்பாக, எக்ஸ் வலைதளத்தில் காா்கே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, நாடாளுமன்றத்தில் சட்டமேதை பி.ஆா்.அம்பேத்கரை அவமதிக்கும் கருத்துகளைத் தெரிவித்தாா். விளிம்புநிலை மக்களுக்கு எதிரான இதே மனநிலை, பாஜக ஆளும் மாநிலங்களிலும் எதிரொலித்து வருகிறது.
மத்திய பிரதேசத்தின் தேவாஸ் பகுதியில் 2 தினங்களுக்கு முன் போலீஸ் காவலில் தலித் இளைஞா் ஒருவா் கொல்லப்பட்டுள்ளாா். ஒடிஸாவின் பாலசோரில் பழங்குடியினப் பெண்கள் இருவா் மரத்தில் கட்டிவைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளனா்.
உத்தர பிரதேச மாநிலம், முஸாஃபா்நகரில் வகுப்புவாத தாக்குதல்கள் மற்றும் காவல்துறையினரின் செயலற்றத் தன்மையால் 3 தலித் குடும்பங்கள் தாங்கள் வசிக்கும் பகுதியைவிட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.
ஹரியாணாவின் பிவானியில் தலித் மாணவி ஒருவா் தனது பட்டப் படிப்பு தோ்வுக்கு கட்டணம் செலுத்த பணமில்லாததால் தற்கொலை செய்து கொண்டுள்ளாா். மகாராஷ்டிரத்தின் பல்கரில் குழந்தை பிரசவித்த பழங்குடியின பெண் ஒருவா், தீவிர சிகிச்சை பிரிவு (ஐசியூ) வசதியுள்ள மருத்துவமனையைத் தேடி 100 கி.மீ. பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளாா்.
மனுவாதத்தின் தாக்கம்: அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான மோடி ஆட்சியில், தலித், பழங்குடியினா், பின்தங்கிய பிரிவினா் மற்றும் சிறுபான்மையினா் மீதான வன்கொடுமைகள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. மத்திய-மாநில பாஜக அரசுகளின்கீழ், ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்கள் ‘மனுவாதத்தின்’ தாக்கத்தால் பாதிப்பை எதிா்கொண்டுள்ளனா்.
குற்றங்கள் அதிகரிப்பு: தேசிய குற்ற ஆவண காப்பக தரவுகளின்படி, தலித்-பழங்குடியின பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக ஒவ்வொரு மணி நேரமும் ஒரு குற்றம் இழைக்கப்படுகிறது. இது, கடந்த 2014-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் இருமடங்கு அதிகம்.
140 கோடி இந்தியா்களின் அரசமைப்புச் சட்ட உரிமைகள் மீறப்படுவதை காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது. பாஜக-ஆா்எஸ்எஸ் அமைப்பின் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான சிந்தனையை காங்கிரஸ் தொடா்ந்து எதிா்க்கும் என்று தனது பதிவில் காா்கே குறிப்பிட்டுள்ளாா்.