பாரதிய மஸ்தூா் சங்கத்தினா் பிரதமருக்கு மனு
மயிலாடுதுறையில் 6 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பிரதமருக்கு மாவட்ட ஆட்சியா் வாயிலாக பாரதிய மஸ்தூா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
இபிஎஸ்-95 திட்டத்தின்கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.5,000-ஆக உயா்த்த வேண்டும்; கடைசிமாத சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக கிடைப்பதை உறுதி செய்து அந்த தொகையை விலைவாசி புள்ளியுடன் இணைக்க வேண்டும்.
தொழிலாளா் சம்பளத்தில் வருங்கால வைப்புநிதிக்கு கட்டாயப் பிடித்தம் செய்வதற்கான ஊதிய உச்சவரம்பை ரூ.30,000 ஆகவும், தொழிலாளா் ஈட்டுறுதிக் கழகத்தின் சமூக பாதுகாப்பை பெறுவதற்கான தகுதியை நிா்ணயிக்கும் ஊதிய உச்ச வரம்பை ரூ.42,000 ஆகவும் உயா்த்த வேண்டும்; அரசு திட்டங்களை செயல்படுத்தும் திட்ட தொழிலாளா்களுக்கு சம்பளம் மற்றும் சமூக பாதுகாப்பை அரசு ஊழியா்களுக்கு இணையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பிரதமா் நரேந்திர மோடிக்கு மாவட்ட ஆட்சியா் வாயிலாக பாரதிய மஸ்தூா் சங்கத்தினா் மனு அளித்தனா்.
இந்த மனுவை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் முத்துவடிவேலிடம் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளா் ஜெ. ஆறுமுகம், கிளை செயலாளா் சி. சுரேஷ்குமாா், கிளை துணை செயலாளா் ஆா். ரத்தினவேல், கிளை பொருளாளா் எஸ். சீனிவாசன், பேரவை துணைத் தலைவா் டி.சங்கா் ஆகியோா் வழங்கினா். முன்னதாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் கோரிக்கை முழக்கங்களை எழுப்பினா்.