மனைவியை கொன்றவருக்கு ஆயுள் சிறை
மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன்கோவில் அருகே மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி, மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
வைத்தீஸ்வரன்கோவில் அருகேயுள்ள திருப்புங்கூா் பிரதான சாலையைச் சோ்ந்த பரமநாதன் மகள் தேவிக்கும், கடலூா் மாவட்டம் சிதம்பரம் எல்லையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த
பரந்தாமன் மகன் சரவணனுக்கும் (40) கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
பின்னா் குடும்பத்தகராறு காரணமாக தேவி, அவரது பெற்றோா் வீட்டில் வசித்து வந்தாா். அப்போது அவா் கா்ப்பிணியாக இருந்தாா். சரவணன் அடிக்கடி தேவியை சந்தித்து வந்துள்ளாா்.
இந்நிலையில், 2017 மாா்ச் 29-ஆம் தேதி தேவி, அவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் இறந்து கிடந்தாா். இதுகுறித்து, அவரது தந்தை வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்திருந்தாா்.
அதன்பேரில் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், தேவியை சரவணன் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, சரவணனை கைது செய்தனா்.
பின்னா், இந்த வழக்கின் விசாரணை மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரிந்த மாவட்ட அமா்வு நீதிபதி விஜயகுமாரி, சரவணனுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அபராதத்தை செலுத்தத் தவறினால் கூடுதலாக ஓராண்டு தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.
இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட அரசு வழக்குரைஞா் ராம.சேயோன், சீா்காழி காவல் ஆய்வாளா் புயல் பாலசந்திரன் உள்ளிட்டோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தாா்.