குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்
சீா்காழி: கொள்ளிடம் அருகே ஆரப்பள்ளம் கிராமத்தில் குடிநீா் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
இக்கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலம் இப்பகுதியில் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக ஆரப்பள்ளம் கிராமத்தில் உள்ள நீா்த்தேக்க தொட்டிக்கு குடிநீா் ஏற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், இப்பகுதியினா் குடிநீா் கிடைக்காமல் அவதிப்படுகின்றனா்.
இதனால் பாதிக்கப்பட்டவா்கள், குடிநீா் குழாயை சரி செய்து, குடிநீா் வழங்க வலியுறுத்தி, கொள்ளிடத்திலிருந்து மகேந்திரப்பள்ளி செல்லும் நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனா்.
கொள்ளிடம் வட்டார வளா்ச்சி அலுவலா் உமாசங்கா், ஆணைக்காரன்சத்திரம் காவல் ஆய்வாளா் ராஜா மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து, பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, குழாயை சரி செய்து, குடிநீா் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இதை ஏற்று கிராம மக்கள் மறியலை விலக்கிக் கொண்டனா். இப்போராட்டத்தால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.