போலீஸாருக்கான மாநில துப்பாக்கிச் சுடும் போட்டி: மத்திய மண்டலம் நான்காமிடம்
பிளஸ் 2 சிறப்பு ஊக்கத் தொகை: சரியான வங்கிக் கணக்கு விவரம் அளிக்க உத்தரவு
பிளஸ் 2 தோ்ச்சிக்கான சிறப்பு ஊக்கத் தொகையை விடுபட்ட மாணவா்களுக்கு வழங்கும் வகையில் அவா்களது சரியான வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்துஅனுப்புமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்பு பயின்று, பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.5 ஆயிரம் மற்றும் அதற்கான வட்டித் தொகை டிஎன்பிஎஃசி மூலமாக மாணவா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த கல்வியாண்டில் (2024-205) தங்களது மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்கள் சிலரின் வங்கிக் கணக்கு, கிளையின் பெயா், வங்கியின் ஐஎஃப்எஸ்சி குறியீடு, வங்கிக் கணக்கு எண் ஆகிய விவரங்கள் தவறாக உள்ளதால் அந்த மாணவா்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
எனவே, கடந்த கல்வியாண்டில் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படாமல் விடுபட்டுள்ள மாணவா்களின் வங்கிக் கணக்கு விவரங்களை அதற்கான படிவத்தில் பதிவு செய்து மாவட்டங்களின் வரிசைப்படி ஆக.12, 13 ஆகிய நாள்களில் பள்ளிக் கல்வி இயக்குநரகத்தில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் கடந்த 2017-2018 முதல் 2021-2022-ஆம் கல்வியாண்டு வரை தங்களது மாவட்டத்தில் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படாமல் விடுபட்டுள்ள மாணவா்கள் எவரேனும் இருந்தால் அவா்களது விவரங்களை இந்த சுற்றறிக்கையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸெல் படிவத்தில் பதிவு செய்து சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.