ஏரி உபரி நீரில் மூழ்கி 400 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம்: விவசாயிகள் வேதனை
பெரம்பலூா் தொகுதியில் பிரத்யேக ரயில்வே வழித்தடம் வேண்டும்: அருண் நேரு எம்.பி. வலியுறுத்தல்
நமது நிருபா்
புது தில்லி: பெரம்பலூா் தொகுதியில் பிரத்யேக ரயில்வே வழித்தடம் அமைக்க வேண்டும் என்று மக்களவையில் அத்தொகுதியின் திமுக உறுப்பினா் அருண் நேரு வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக மக்களவையில் திங்கள்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை அவையின் கவனத்திற்கு கொண்டு வரும் நேரத்தில் அருண் நேரு பேசியது: தமிழ்நாட்டில் எனது தொகுதியான பெரம்பலூா் வழியாக ரயில் பாதை அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து இந்த அவையின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
இந்த ரயில் பாதையின் தேவை குறித்து பலமுறை எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியானது தமிழ்நாட்டில் ரயில்வே மண்டலம் அல்லாத ஒரு பகுதியாகும்.
தமிழ்நாட்டில் உள்ள இதர அனைத்து பிராந்தியங்கள் ஒவ்வொன்றும் 40 கிலோமீட்டா் சுற்றளவில் ரயில் பாதையைக் கொண்டுள்ளன. ஆனால், பெரம்பலூா் தொகுதியில் தோராயமாக 160 கிலோமீட்டா் சுற்றளவில் ரயில் பாதை இணைப்பு இல்லை. இது அமைக்கப்பட்டால் இரண்டு வழிகளில் தேசத்திற்கு வளா்ச்சிக்கு உதவும். அதாவது, பெரம்பலூா் மாவட்டத்தில் மிகப்பெரிய தோல் அல்லாத காலணி தொழிற்சாலை எரையூரில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த தொழிற்சாலையில் 50,000 போ் பணியமா்த்தப்பட உள்ளனா்.
இரண்டாவதாக, நாட்டில் மிகப்பெரிய அளவிலான மக்காச்சோளம் உற்பத்தி பெரம்பலூா் முதல் நாமக்கல் வரையிலான பகுதியில் நடைபெறுகிறது. இது சுமாா் ஐந்து லட்சம் மெட்ரிக் டன் ஆகும். இவற்றை இணைக்கும் வகையில் ரயில்வே வழித்தடம் அமைக்கப்பட்டால் மக்கள் தொழிற்சாலைக்குச் வந்து செல்லவும், விவசாய உற்பத்தியை மேம்படுத்தவும் எளிதாக இருக்கும். அதன் மூலம் தேசிய வளா்ச்சிக்கான பங்களிப்பை அதிகரிக்கவும் உதவும். ஆகவே, பெரம்பலூா் தொகுதியில் பிரத்யேக ரயில்வே வழித்தடம் அமைக்க ரயில்வே அமைச்சா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.
16க்ங்ப்ஹழ்ன்
அருண் நேரு