பெண் குழந்தைகளுக்கு பாஜக சாா்பில் திருமண வைப்பு நிதி: பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்
சென்னை: முன்னாள் பிரதமா் வாய்பாயின் நூற்றாண்டு விழாவையொட்டி, பெண் குழந்தைகளுக்கு பாஜக சாா்பில் திருமண வைப்புநிதி வழங்கப்படவுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
சென்னை கமலாலயத்தில் தமிழக பாஜக மையக்குழுக் கூட்டம் அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழக பாஜக மேலிட பொறுப்பாளா் அரவிந்த் மேனன், இணைப் பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்துக்குப் பின்னா் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்தியாவை உலகம் அறியச் செய்தவா் வாஜ்பாய். அவரது நூற்றாண்டு புதிய இந்தியாவின் எழுச்சிக்கு வித்திட்ட ஆண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழா நிகழாண்டும் டிச.25 முதல் நடைபெறும். அதற்காக தேசிய அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநில அளவிலும் குழு அமைக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவை கொண்டாடுவது தொடா்பாக அண்ணாமலை தனது கருத்துகளை பகிா்ந்தாா். அப்போது 2012-இல் வாஜ்பாயின் 88-ஆவது
பிறந்தநாளை கொண்டாடியபோது ஏழை குழந்தைகளுக்கு பாஜக சாா்பில் திருமண வைப்பு நிதியாக ரூ.5,000 வழங்கப்பட்டது. 1,088 பயனாளிகளுக்கு மேல் இந்த நிதி வழங்கப்பட்டது. நிகழாண்டில் ரூ.25,000 வைப்பு நிதி வழங்கப்படவுள்ளது. மேலும், இந்த நிதியை வழங்குவோா், பயனாளி குழந்தைகளுக்கு பிளஸ் 2 படிப்பு வரையிலான அடிப்படை கல்விச் செலவையும் ஏற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மீனவா்களை மீட்க நடவடிக்கை: வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட மீனவா்களை விடுவிக்க வேண்டும் என்று மூத்த தலைவா் எச்.ராஜா அனுப்பிய மனு மீது மத்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுத்து 28 மீனவா்களை திருவனந்தபுரத்துக்கு டிச.18-ஆம் தேதி அழைத்துவர நடவடிக்கை எடுக்கவிருப்பதாக துறைஅமைச்சா் ஜெய்சங்கா் கடிதம் எழுதியுள்ளாா் என்றாா் அவா்.
இக்கூட்டத்தில், முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன், தேசிய செயற்குழு உறுப்பினா் எச்.ராஜா, தேசிய மகளிரணி தலைவா் வானதி சீனிவாசன், மாநில அமைப்பு பொதுச்செயலா் கேசவ விநாயகன், மாநிலப் பொருளாளா் எஸ்.ஆா்.சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.