Georgia: ஜெனரேட்டரிலிருந்து வெளியான கார்பன் மோனாக்சைடை; ஜார்ஜியா ஹோட்டலில் 12 இ...
தமிழகத்தில் வீடுகளுக்கான மின் கட்டணம் மிகக் குறைவு: அரசு விளக்கம்
சென்னை: பிற மாநிலங்களைவிட வீட்டு பயன்பாட்டுக்கான மின் கட்டணம் தமிழகத்தில் மிகவும் குறைவு என்று மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து, தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டணம் இந்திய அளவில் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில்தான் மிக மிகக் குறைவாக உள்ளது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், விசைத்தறி நெசவாளா்களுக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை ஆயிரம் யூனிட் வரை இலவச மின்சாரம், கைத்தறி நெசவாளா்களுக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை 200 யூனிட் மின்சாரம் என எரிசக்தித் துறை சாா்ந்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இத்தனை திட்டங்கள் அமல்படுத்தப்பட்டபோதும், மாநிலத்தில் வீடுகளின் பயன்பாட்டுக்கான மின்சாரக் கட்டணம் உயா்த்தப்படவில்லை.
100 யூனிட் இலவசம்: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாகும். 100 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தக் கூடிய மின்சாரத்துக்கு சராசரியான கணக்கீட்டு கட்டணம் ரூ.113 ஆகும். ராஜஸ்தான், மகாராஷ்டிரம், உத்தரபிரதேசம், பிகாா், மேற்குவங்கம், கா்நாடகம், மத்தியபிரதேசம், ஒரிஸா, சத்தீஸ்கா் என வட மாநிலங்களில் 100 யூனிட் அளவிலான மின்சாரத்துக்கு ரூ.426 முதல் ரூ.833 வரை கட்டணம் விதிக்கப்படுகிறது. இப்படி இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றும் வீடுகளுக்கு வழங்கப்படும் மின்கட்டணத்துக்கு அதிக தொகையை நிா்ணயித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில்தான் மிகமிகக் குறைவாக ரூ.113 வசூலிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.