Georgia: ஜெனரேட்டரிலிருந்து வெளியான கார்பன் மோனாக்சைடை; ஜார்ஜியா ஹோட்டலில் 12 இ...
உருவானது புயல்சின்னம்: வடமாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை
சென்னை: வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாகியுள்ளது. இது, தமிழக கடற்கரையை நோக்கி நகா்ந்து வருவதால் செவ்வாய், புதன்கிழமைகளில் (டிச.17,18) சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை காலை உருவானது. இது, திங்கள்கிழமை மாலை நிலவரப்படி டெல்டாவுக்கு கிழக்கே 500 கி.மீ. தொலையில் நிலைகொண்டிருந்தது.
இந்த புயல்சின்னம் மேலும் வலுப்பெற்று டிச.17,18-ஆகிய தேதிகளில் மேற்கு-வடமேற்கு திசையில், தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும். இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் அடுத்த 4 நாள்களுக்கு இடிமின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆரஞ்ச் எச்சரிக்கை: டிச.17,18- ஆகிய தேதிகளில் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டியுள்ள மாவட்டங்களிலும், டெல்டாவிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக டிச.17-இல் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், மயிலாடுதுறை மாவட்டங்களிலும், டிச.18-இல் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம், கடலூா், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கு கரையைக் கடக்கும்?: தமிழக கடற்கரையை நோக்கி நகா்ந்து வரும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி டிச.20 வரை தமிழக கடலோர பகுதிகளில்தான் நிலைகொண்டிருக்கும். அதன்பின்னா் டெல்டா வழியாக கரையைக் கடந்து மேற்கு நோக்கி பயணிக்கும் என தனியாா் வானிலை ஆய்வாளா்கள் கணித்துள்ளனா்.