நாமக்கல்: `பணம் பெருகும்' -யூடியூபில் ஜோதிடர் கூறியதை கேட்டு கோயிலில் குவிந்த மக...
சேலம்: சிறைச்சாலைக்குள் கஞ்சா சப்ளை; வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு - சிறைத்துறை ஆக்ஷன்
சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் அமைந்துள்ளது ஆண்கள் மத்திய சிறைச்சாலை. இதில், தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1000 க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சேலம் பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த அப்சல்கச்சா எனும் நபர் வழிப்பறி வழக்கில் கைதாகி 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். கடந்த 13.12.2024 ஆம் தேதி இவரை பார்ப்பதற்காக வழக்கறிஞர் முருகன் கார் என்பவர் சென்றுள்ளார்.
அப்போது வழக்கறிஞரும் கைதி அப்சல்லும் சந்தித்து பேசிவிட்டு சென்றுள்ளனர். அதன் பின்னர், கைதி அப்சல்லின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதை அறிந்த சிறை வார்டன்கள் சோதனை செய்தபோது அந்நபரிடமிருந்து டேப் சுற்றிய பொட்டலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. பின்னர் அதனை பிரித்துப் பார்த்தபோது அதிலிருந்து கஞ்சா, டேட்டா கேபிள், சிம்கார்டு முதலியவை கைப்பற்றப்பட்டன.
இதுகுறித்து சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத்திடம் பேசியபோது, “கைதியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்து சோதனை செய்தபோது தான் அவரிடமிருந்து கஞ்சா, டேட்டா கேபிள், சிம்கார்டு உள்ளிட்ட பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர் சிசிடிவி ஆய்வு செய்தபோதும், வழக்கறிஞர் தனது உள்ளாடைக்குள் இருந்து எடுத்து கொடுப்பது தெரியவந்தது.
அதன்மூலம் கைதியிடம் விசாரணை செய்தபோது, சிறைக்குள் இருக்கும் கைதிகளான தர்மபுரியைச் சேர்ந்த அஜித் எனும் நபருக்கும், சாந்தகுமார் எனும் நபருக்கும் இந்த பொட்டலத்தை கொடுக்கச் சொல்லி வழக்கறிஞர் கூறியது தெரியவந்தது.
இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா, வழக்கறிஞர் எப்படி ஸ்கேன் கருவியை தாண்டி எடுத்துவந்தார் என்று பார்த்தபோது, சம்பந்தப்பட்ட பொட்டலத்தை கார்பன் பேப்பரில் சுற்றி, அதன் மேல் பக்கத்தில் டேப் சுற்றப்பட்டதால், ஸ்கேன் கருவியின் அது தென்படவில்லை. மேலும் வழக்கறிஞருக்கு உதவியாக மற்றொரு சிறை கைதி குணசேகரன் எனும் நபர் இருந்ததும் தெரியவந்தது. அதன்மூலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டது” என்றார்.
இதுகுறித்து அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளர் தவமணியிடம் பேசியபோது, “சம்பந்தப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கறிஞர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. அதன்மூலம் தான் வழக்கறிஞர் மீதான கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...