Mumbai: வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்புகள்; உணவு தேடி வரும் குள்ளநரிகள்... அச்சத்தில் மும்பைவாசிகள்!
மும்பைக்குள் இதற்கு முன்பு பல முறை சிறுத்தைகள் புகுந்து பொதுமக்களை தாக்கிய சம்பவங்கள் நடந்திருக்கிறது. மும்பையின் நடுப்பகுதியில் வனப்பகுதி இருப்பதால் இது போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. பொதுமக்களை தாக்கும் சிறுத்தைகளை வனத்துறை ஊழியர்கள் பிடித்துச்சென்று மறுவாழ்வு முகாம்களில் அடைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
சிறுத்தைகளின் நடமாட்டம் குறைந்த நிலையில் இப்போது குள்ளநரிகள் மும்பைக்குள் புகுந்து பொதுமக்களை தாக்க ஆரம்பித்துள்ளன. மும்பை செம்பூர் டிராம்பே பகுதியில் மாங்குரோவ் வனப்பகுதி இருக்கிறது. இந்த வனப்பகுதியில் குள்ளநரிகள் அதிக அளவில் வசிக்கின்றன. இந்த நரிகள் இப்போது உணவு தேடி பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைய ஆரம்பித்து இருக்கிறது. அதுவும் பட்டப்பகலிலேயே பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைய ஆரம்பித்துள்ளன.
செம்பூர் பகுதியில் காலை 11 மணிக்கு 22 வயது நபரை குள்ளநரி தாக்கி இருக்கிறது. அந்த நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் இதே போன்று வீட்டிற்கு வெளியில் விளையாடிக்கொண்டிருந்த 9 வயது சிறுவனை குள்ளநரி கடித்துவிட்டது. இது குறித்து பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் சிறுவனின் தாயாருக்கு தகவல் கொடுத்தனர். ஆரம்பத்தில் சிறுவனை நாய் கடித்துவிட்டதாக சொன்னார்கள். அதன் பிறகு நாய் கடிக்கவில்லை என்றும், நாய் போன்று இருந்த விலங்கு கடித்ததாக தெரிவித்துள்ளனர். சிறுவனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதனை வனவிலங்குகள் நல ஆர்வலர்களும் உறுதிபடுத்தினர்.
இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. வனத்துறை ஊழியர்கள் சம்பந்தப்பட்ட குள்ளநரியை தேடிக்கண்டுபிடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதம் டிராம்பே பகுதியில் 5 குள்ளநரிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது.