நிதி உரிமைக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
Snake: பாம்பு வீட்டுக்கு வருவது ஏன்? ஷூக்குள்ளே, மாடித்தோட்டத்துக்குள்ளே போகுமா? -நிபுணர் விளக்கம்!
வேளச்சேரி அருகே ஒரு வீட்டுத்தோட்டத்தை வீடியோ எடுக்க சென்றபோது, தோட்டத்துக்குள் காலடி எடுத்து வைத்தவுடனே அந்த வீட்டின் உரிமையாளர் சத்தமாக கைத்தட்டியபடியே நுழைந்தார். 'ஏங்க' என்றதும், 'செடி, கொடி இருந்தாலே அங்க பாம்பும் வந்திடுங்க. இப்படி கைத்தட்டிக்கிட்டே தோட்டத்துக்குள்ள நுழைஞ்சா நம்ம காலடி சத்தத்துக்கும் கைத்தட்டுற சத்தத்துக்கும் ஓடிப் போயிடும். நாம சேஃப் என்றார்.'
இன்னொரு சம்பவம். இது கிராமத்தில் நடந்தது. விஷப்பாம்பு ஒன்று மனிதர்கள் வாழும் பகுதிக்குள் வந்துவிட்டது. வயிறு நிறைய முட்டைகளுடன் இருந்த அந்தப் பாம்பை கொன்றே விட்டார்கள். ஸோ, செடி, கொடி இருந்தால் அங்கு பாம்பும் இருக்கும். அல்லது வரும். தவிர, இப்போது மழைக்காலமும் தொடங்கிவிட்டது. இனிமேல் பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். பாம்புகளின் தாக்குதலில் இருந்து நம்மை காத்துக்கொள்ள எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன, கடித்துவிட்டால் என்ன செய்ய வேண்டும், யாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற சந்தேகங்களை, சென்னை கிண்டி பாம்புப்பண்ணை ஆராய்ச்சி இயக்குனர் கலையரசன் அவர்களிடம் கேட்டோம்.
குடியிருப்புப் பகுதிகள்ல ஏன் பாம்பு வருது?
''உங்க வீட்டை உள்ளே, வெளியேன்னு ரெண்டு பக்கமும் சுத்தமா வெச்சிக்கோங்க. வீட்டைச் சுற்றி நீர் தேங்காம பார்த்துக்கோங்க. தேங்கினா, பூச்சி, கொசு, தவளை வரும். அதை சாப்பிட பாம்புங்க வரும். தண்ணி தேங்குற ஏரியாக்கள்ல மாடில இருந்து பார்த்தா, பாம்புங்க அதுல நீச்சலடிச்சிட்டுக் கிடக்கிறதைப் பார்க்கலாம். நம்ம மக்கள்கிட்ட இன்னொரு கெட்டப்பழக்கம் இருக்குங்க. எங்க தண்ணி தேங்கியிருந்தாலும் அதுல அவங்க வீட்டுக் குப்பையை கொண்டுபோய் கொட்டிடுறாங்க. குப்பையில இருக்கிற மீந்த உணவுகளைச் சாப்பிட எலிகள் வரும். அந்த எலிகளைச் சாப்பிட பாம்புங்க வரும். குடியிருப்புப்பகுதிகள்ல பாம்புகள் வர்றதுக்கு இதான் காரணம்.
கிராமப்புறங்கள்ல பாம்பு அதிகமா இருக்கிறதுக்கு என்னக் காரணம்?
கிராமப்புறங்களைப் பொறுத்த வரைக்கும், அங்க செடி, கொடி அதிகமா இருக்கிறது ஒருபக்கம்னா, அங்க நிறைய பேர் கோழி வளர்ப்பாங்க. கோழிக்குஞ்சுகளைச் சாப்பிடுறதுக்காக பாம்புங்க வரும். கோழி வளர்க்கிறவங்க அதுக்கான முன்னெச்சரிக்கையோட இருக்கிறதுதான் இதுக்கு ஒரே வழி. தவிர, அவங்களும் வீட்டைச்சுற்றி சுத்தமா வெச்சிக்கணும்.
ஷூவுக்குள்ள பாம்புகள் நுழையுறதுக்கு என்னக் காரணம்?
மழைக்காலத்துல பாம்புங்க கதகதப்பான இடத்தைத் தேடி அலையும். ஷூவுக்குள்ள கதகதப்பா தான் இருக்கும். கூடவே இருட்டாவும் இருக்கும். அதனாலதான், ஷூவுக்குள்ளப் போயி சுருண்டுக்குதுங்க.
பாம்பு மாடித்தோட்டத்துக்கு வருமா?
வரும். 5 அடி நீளமுள்ள பாம்புகளால மாடித்தோட்டத்துக்கு தாராளமாக வர முடியும். வீடுகளோட சுவர்கள் பாம்புங்க ஏறுற அளவுக்கு சொர சொரப்பா தான் இருக்கும்.
பாம்பு வீட்டுக்குள்ள வந்துட்டா என்ன செய்யணும்?
உடனே 101-க்கு போன் பண்ணுங்க. தீயணைப்புத்துறையினரும் வனத்துறையினரும் அரை மணி நேரத்துல வந்திடுறாங்க. நானே என் நண்பர்கள் பலரோட விஷயத்துல இதை அனுபவபூர்வமாக பார்த்திருக்கேன். அரை மணி நேரத்துல வர்றாங்க. அதனால, நீங்களே அத அடிக்கவோ, பிடிக்கவோ முயற்சி பண்ணாதீங்க. இந்த செயல்கள்தான் சில நேரங்கள்ல யாரோ ஒருத்தர் பாம்புக்கடிக்கு ஆளாகுறதுக்கு காரணம். அப்புறம், அது வீட்டுக்குள்ள எங்க இருக்கு, எங்க போகுதுன்னு முடிஞ்சவரைக்கும் கண்காணியுங்க.
விஷப்பாம்புகளை எப்படி அடையாளம் கண்டுபிடிக்கிறது?
பாம்புகள்ல விஷமுள்ள பாம்பு, விஷமற்ற பாம்புன்னு ரெண்டு வகை இருக்கு. தமிழ்நாட்ல நல்ல பாம்பு, கட்டை விரியன், சுருட்டை விரியன், கண்ணாடி விரியன்னு விஷமுள்ள பாம்புகள்ல 4 இனங்கள் இருக்கு. நல்ல பாம்பு படம் எடுக்குறப்போ, தலையில வளையம் மாதிரி குறி இருக்கும். கட்டை விரியன் கருப்பாகவும், சில்வர் நிற பட்டையுடனும் இருக்கும். கண்ணாடி விரியன் ஃபிரவுன் நிறத்துல, தோல் மேல சங்கிலி வடிவ டிசைன் இருக்கும். சுருட்டை விரியன் சின்னதா இருக்கும். தோல் மேல குறுக்குவாட்டுல பட்டைப்பட்டையா இருக்கும். பாம்புகளோட குட்டிகளும் விஷத்தோட தான் பிறக்கும்கிறதால, அதுங்க கிட்டேயும் எச்சரிக்கையா, பாதுகாப்பா இருங்க. எல்லோருமே பாம்புப்பண்ணைகளுக்குப் போய் பாம்புக்கடி பத்தின விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஒருமுறை பார்த்தீங்கன்னா, பாம்புகளை அடையாளம் கண்டுபிடிக்கிறதுல, பாம்பு கடிச்சிட்டா என்ன செய்யணும்கிறதுல பதற்றமில்லாம இருப்பீங்க.
பாம்புகள் எந்த நேரத்துல வெளியே வரும்?
இந்த நேரத்துல வெளியே வரும்னு குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஆனா, மாலை நேரங்கள்ல, அதிகாலை நேரங்கள்ல விஷப்பாம்புகள் சுறுசுறுப்பா அங்கேயும் இங்கேயும் போய்க்கிட்டிருக்கும். நாம் இந்த நேரங்கள்ல வெளியே போறோம்னா கவனமா தரையைப் பார்த்து நடக்கணும்.
பாம்புக் கடிச்சிட்டா என்ன செய்யணும்?
உடனடியா பக்கத்துல இருக்கிற அரசு மருத்துவமனைக்குப் போயிடணும். தமிழ்நாடு முழுக்க அனைத்து அரசு மருத்துவமனைகள்லேயும் பாம்புக்கடி நஞ்சு முறிவு மருந்துகள் கையிருப்புல இருக்கு. ஆரம்ப சுகாதார மையங்களுக்குப் போனீங்கன்னா, உடனடியா முதலுதவி செஞ்சு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிடுவாங்க. கவனம், முதலுதவியைக்கூட வீட்ல செய்யக்கூடாது. செய்யத்தெரியாம செஞ்சிட்டு, அதுதான் முதலுதவின்னு நம்பி வீட்லேயே இருந்துட்டீங்கன்னா அது உயிராபத்துல முடிஞ்சிடும்கிறதால, நான் இத்தனை அழுத்திச் சொல்றேன். பாம்புக்கடிக்கு கட்டுப்போடுறது, கடிபட்ட இடத்துல இருக்கிற ரத்தத்தை உறிஞ்சி எடுக்கிறதுன்னு எதையும் செய்யாதீங்க.
கடிப்பட்டங்களை மருத்துவமனைக்கு கூட்டிட்டுப் போறப்போ, அவங்களை நடக்க விடக்கூடாது, ஓட விடக்கூடாது, அவங்க பதட்டமானா உடம்புல விஷம் வேகமா பரவும், கவனம். பாம்புக் கடிச்ச இடத்தை தேய்த்து விடவும் கூடாது. விஷமில்லாத பாம்புக்கடிக்கு சிறப்பு மருத்துவம்னு எதுவும் கிடையாது. கடிச்ச இடத்துல புண்ணுக்கு வைக்கிற மருந்தை வெச்சு, டிடி இன்ஜெக் ஷன் போட்டாலே போதுமானது.''