சபரிமலை: ``பெருவழிப்பாதையில் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு நேரடி தரிசனம்'' -தேவசம்போர்டு சொல்வதென்ன?
சபரிமலை செல்லும் பக்தர்கள் நேரடியாக பம்பா வரை வாகனத்தில் சென்று அங்கிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் நீலி மலை வழியாக சன்னிதானம் செல்வார்கள். பெரும்பாலான பக்தர்கள் இந்த எளிய வழியை பயன்படுத்துவார்கள்.
இது மட்டுமல்லாது சபரிமலை சன்னிதானம் செல்ல மேலும் இரண்டு பாதைகள் உள்ளன. எருமேலியில் இருந்து வனப் பாதை வழியாக சுமார் 50 கிலோமீட்டர் தூரம் நடந்து பேரூர்த்தோடு, காளைகட்டி, அழுதா நதி, கரிமலை, பெரியானைவட்டம் வழியாக பம்பா சென்று அங்கிருந்து சபரிமலை செல்வார்கள்.
இது மட்டுமல்லாது புல் மேடு வழியாக நடந்து செல்லும் பக்தர்கள் சுமார் 6 கிலோமீட்டர் வனப்பாதையில் நடந்து சென்று நேரடியாக சன்னிதானத்தை அடையலாம். இந்த மூன்று வழிகளில் எருமேலியில் இருந்து வனப்பாதை வழியாக சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தான் மிகவும் சிரமம் அதிகம். அப்படி வரும் பக்தர்களும் பம்பா சென்றடைந்ததும் அனைத்து பக்தர்களுடன் சேர்ந்து மலையேறும் நிலை ஏற்படுகிறது.
பம்பாவிலிருந்து பயணத்தை தொடங்கும் பக்தர்களுடன் சேர்ந்து செல்வதால் எருமேலியிலிருந்து நெடும் தொலைவு நடந்து வந்த பக்தர்கள் மற்ற பக்தர்களுடன் வரிசை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் நிலை உள்ளது. இது பக்தர்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்துவதால், எருமேலியில் இருந்து பெருவழிப்பாதை வரும் பக்தர்களுக்கு முக்கியத்துவம் அளித்து எளிமையான வழிபாட்டிற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை இருந்து வருகிறது.
இந்த நிலையில் எருமேலியில் இருந்து பெருவழிப் பாதை வழியாக நடந்து செல்லும் பக்தர்கள் மற்ற பக்தர்களுடன் கியூ கவுண்டர்களில் நிற்காமல் நேரடியாக தரிசனம் செய்வதற்காக வசதி செய்யப்படும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் கூறுகையில், "எருமேலியில் இருந்து வனப்பாதை வழியாக நடந்து செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு வனத்துறை உதவியுடன் ஒரு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்கு வனத்துறையின் ஒத்துழைப்பை நாடி உள்ளோம். அந்த அடையாள அட்டை மூலம் அந்த பக்தர்களுக்கு தரிசனம் செய்ய முக்கியத்துவம் அளிக்க வழிவகை செய்யப்படும். இதற்கான நடவடிக்கைகள் இந்த மண்டல பூஜை காலத்தில் இருந்து தொடங்கவும் நடவடிக்கை எடுத்துவருகிறோம்.
சபரிமலையில் தற்போது இண்டர்நெட் வசதி தேவையான அளவு இல்லை. திருவிதாங்கூர் தேவசம்போர்டு உருவாக்கப்பட்ட பிளாட்டினம் ஜூபிலியை முன்னிட்டு அடுத்த ஆண்டு தேவசம்போர்டு சேவைகள் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும். அதற்காக நிலக்கல் முதல் பம்பா வரை டக்ட் பைபர் ஆப்டிக்கல் கேபிள் அமைக்கப்படும். இதன் மூலம் முழுமையாக இணைய சேவை வழங்கமுடியும் என பி.எஸ்.என்.எல் உள்ளிட்ட அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களும் அறிவித்துள்ளன. இப்போது மண்டல மகரவிளக்கு பூஜை காலத்தில் மட்டும்தான் நெட் சேவை கிடைகிறது. பைபர் ஆப்டிகல் கேபிள் அமைக்கப்பட்டால் அனைத்து நாள்களும் நெட் சேவை கிடைக்கும். திருவிதாங்கூர் தேவசம்போர்டின் கீழ் உள்ள 1252 கோயில்களுக்கும் டெம்பிள் சாப்ட்வேர் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்" என்றார்.