தியானம், உபவாசத்துக்கு வலிமையான உடல் அவசியம்: காஞ்சி சங்கராசாரிய சுவாமிகள்
நாக்கைப் பிளவுப்படுத்தி டிரெண்டிங் டாட்டூ - கைதுசெய்யப்பட்ட இருவர்; திருச்சி அதிர்ச்சி!
திருச்சி மாநகரம், வெனிஸ் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன். இவர், சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஏலியன் டாட்டூ என்கிற பெயரில் உடலில் டாட்டூ வரையும் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் அப்பகுதியில் அந்த கடையை நடத்தி வருகிறார். உடலில் வித்தியாசமாக டாட்டூ வரைவது உள்ளிட்டவற்றை செய்து வந்த அவர் டிரெண்டிங்கிற்காக பாம்பு, ஓணான் உள்ளிட்ட விலங்குகளுக்கு இருப்பது போல் மனிதர்களுக்கும் நாக்கைப் பிளவுபடுத்தும் செய்முறையை செய்வதாக கூறி அதை அவர் விளம்பரம் செய்து வந்துள்ளார். அதோடு, கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு ஹரிஹரன் மும்பை சென்று சுமார் ரூ. 2 லட்சம் செலவு செய்து தன் கண்களில் பச்சை குத்தி கொண்டுள்ளார், அதோடு, தன் நாக்கையும் பிளந்து பச்சை குத்திக் கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து ஹரிஹரன் தன் நண்பர் ஒருவருக்கும் கடந்த 9 - ம் தேதி தன் பச்சை குத்தும் கடையில் வைத்து உரிய பயிற்சி மற்றும் அனுமதியின்றி நாக்கைப் பிளந்து பச்சை குத்தியுள்ளார். மேலும், அந்த நாக்கைப் பிளந்து பச்சைக் குத்தும் செயலை வீடியோ எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதோடு, அவர் தன்னுடைய நாக்கைப் பிளவுப்படுத்தி அதனை தன்னுடைய instagram பக்கத்திலும் பதிவிட்டு வந்துள்ளார். அதனைப் பார்த்த சிலர் அவரிடம் சென்று தங்கள் நாக்கைப் பிளவுபடுத்தி கொண்டுள்ளனர். அந்த வீடியோக்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளார். உலக நாடுகள் பலவற்றில் இந்த செய்முறையை ட்ரெண்டிற்காக பலர் செய்து வந்த நிலையில், திருச்சியில் அதை செய்வதாக ஹரிஹரன் விளம்பரம் செய்துள்ளார்.
இது குறித்து அறிந்த திருச்சி மாநகர போலீஸார், அவருடைய instagram பக்கத்தை முழுமையாக ஆய்வு செய்து, அது குறித்து விசாரணை செய்ததில் அவர் உரிய அனுமதி இன்றி நாக்கைப் பிளவுபடுத்தும் செய்முறை செய்தது தெரியவந்தது. அதனையடுத்து ஹரிஹரனையும் அவர் கடையில் பணியாற்றிய ஜெயராமன் என்பவரையும் திருச்சி மாநகர கோட்டை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், போலீஸார் கொடுத்த தகவலின் அடிப்படையில் உரிய அனுமதியின்றி செயல்பட்ட அவருடைய டாட்டூ கடைக்கு மாநகராட்சியினர் சீல் வைத்தனர். அதோடு, கைது செய்யப்பட்ட ஹரிஹரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் இதற்கு முன்பாக மும்பையில் ஒரு டாட்டூ வரையும் இடத்தில் பணியாற்றியதாகவும், அங்கு இந்த செயல்முறையை கற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சட்டத்துக்குப் புறம்பாக நாக்கைப் பிளவுப்படுத்தும் முறையை செய்து வந்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.