சதம் விளாசிய சஞ்சு சாம்சன்; தென்னாப்பிரிக்காவுக்கு 203 ரன்கள் இலக்கு!
பெருங்கடல் அதிசயம்: இந்தியப் பெருங்கடலில் உள்ள 'ஈர்ப்புவிசை பள்ளம்' - ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?
புவியில் ஒரு இடத்தில் சராசரியைவிட மிகவும் குறைவான ஈர்ப்புவிசை இருப்பதால் ஏற்படும் பள்ளம், இந்தியப் பெருங்கடலிலும் இருக்கிறது.
புவியில் உள்ள பெரும் ஈர்ப்பு விசைப் பள்ளங்களில் இதுவும் ஒன்று. இந்தப் பாதாளம் ஏன் தோன்றியது என்பதற்கான காரணத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
விண்கலன் அனுப்பி செவ்வாயில் தரையிறக்குகிறோம். மனிதனை நிலவுக்கு அனுப்புகிறோம். சூரியனை ஆராய விண்கலன் செல்கிறது. விண்வெளியில் தொலைநோக்கியை நிலை நிறுத்தி, சுமார் 1200 கோடி ஒளியாண்டு தூரத்துக்கு அப்பால் உள்ளதைப் படம் பிடிக்கிறோம். ஆனால், நம் காலுக்கடியில் உள்ள புவியின் அடியாழத்தில் என்ன நடக்கிறது என்பதை ஆராய்வதில் நாம் அவ்வளவு முன்னேறவில்லை.
35 கி.மீ. ஆழத்தில் உள்ள புவி மேலடுக்கின் அடிப்பகுதியை நேரடியாக ஆராய்வதற்குக் கூட இதுவரை நாம் கருவி எதையும் அனுப்பியதில்லை. சுற்றிவளைத்து, மறைமுக ஆய்வுகளின் வழியாகத்தான் புவியின் அடியாழத்தில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறோம். அதனால், புவியின் அடியிலும் மேற்புறத்திலும் விடைகாண முடியாமல் நீடிக்கும் புதிர்கள் ஏராளம்.
பள்ளியில் உலக உருண்டை அதற்குரிய தாங்கியில் அழகாக சுழல்வதைப் பார்த்திருக்கிறீர்களா? அதன் வடிவம் எப்படி இருக்கிறது? வடிவ ஒழுங்கோடு, உருண்டையாக, வழுவழுப்பாக இருக்கிறது அல்லவா? புவி உண்மையில் இப்படி கச்சிதமான உருண்டை அல்ல, ஓரு பக்கம் பிதுங்கிப் பெரிதாகவும், வேறொரு பக்கம் நசுங்கி சின்னதாகவும் உள்ள உருளைக் கிழங்கு போலத்தான் புவியின் வடிவம் இருக்கிறது. இது போதாது என்று, அதன் மேற்பரப்பு முழுவதும், மலையும், பள்ளத்தாக்கும், பீடபூமியும், பெருங்கடலுமாக ஏற்ற இறக்கத்தோடுதான் இருக்கிறது.
அதைப் போலவே, புவியில் எல்லா இடத்திலும் ஈர்ப்புவிசை கூட ஒன்றுபோலவே இல்லை.
நிலத்தில் உள்ள புவி மேலடுக்கு, அதற்குக் கீழே உள்ள புவி உறையடுக்கு (Mantle), அதற்குக் கீழே உள்ள மையக் கரு போன்ற அடுக்குகளில் உள்ள சரக்கு எல்லா இடத்திலும், ஒரே நிலையிலும், ஒரே அடர்த்தியில் இல்லை. உள்ளே போகப் போக திட நிலை மாறி, உட்கருவில் அதிபயங்கர வெப்பத்தில் பொருள்கள் கூழ்ம நிலையில் கொதித்துக்கொண்டிருக்கும்.
அடர்த்தி அதிகம் உள்ள இடத்தில் புவியீர்ப்பு விசை கூடுதலாக இருக்கும். அடர்த்தி குறைவாக இருக்கும் இடத்தில் புவியீர்ப்பு விசை குறைவாக இருக்கும். இந்த அடர்த்திக்கேற்பவே புவியின் வெளிப்புறத் தோற்றமும், நசுங்கியும், பிதுங்கியும் அடிவாங்கிய பிளாஸ்டிக் பந்துபோலவே இருக்கும்.
ஆனால், புவியின் புற வடிவத்தை வரையறுப்பது அவ்வளவு எளிது அல்ல. ஏனென்றால் புவியின் மேற்பரப்பில் 71 சதவீதம் பெருங்கடல்களால் ஆனது. பெருங்கடல்கள் பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப, அலைகளாலும், ஓதங்களாலும், நீரோட்டங்களாலும் ஒரு நேரம் ஒரு இடத்தில் உயர்ந்தும், இன்னொரு நேரம் தாழ்ந்து அடங்கியும் உருவத்தை மாற்றிக்கொண்டே இருப்பவை. எனவே, புவியின் வடிவம் இன்னதுதான் என்று எப்படி வரையறுப்பது?
புவிக்கு கற்பனையாக ஜியாய்டு என்று ஒரு வடிவுருவை உருவாக்கினார்கள். கடலின் நீர்ப்பரப்பு மீது புவியீர்ப்பு விசையும், புவி சுற்றுவதால் ஏற்படும் விசையும் மட்டுமே செயல்படுகிறது; அலைகளும், ஓதங்களும், நீரோட்டங்களும் இல்லை என்று வைத்துக் கொண்டால், புவியின் உருவம் ஒவ்வோர் இடத்திலும் எப்படி இருக்கும் என்பதைக் கணக்கிட்டு அதற்கேற்ப உருவாக்கிய மாதிரி இது. புறவிசை ஏதுமில்லாவிட்டால், புவிக்கு மட்டுமே உரிய வடிவம் இதுதான் என்று தீர்மானித்தார்கள். இந்த வடிவுருவுக்கு ஆங்கிலத்தில் ‘ஜியாய்டு’ என்று பெயர். புவிக்கு உள்ளே நடக்கும் இயற்பியல் நடவடிக்கைகளே இந்த ஜியாய்டு வடிவத்தை பெரிதும் தீர்மானிக்கின்றன.
புவியின் இந்த ஜியாய்டு வடிவுருவில் உள்ள ஏற்றத் தாழ்வுகளே ஜியாய்டு அனாமலி (ஜியாய்டு பிறழ்வுகள்) என்று அழைக்கப்படுகின்றன. புவியின் அடியாழத்தில் பொருள்களின் நிறையில் உள்ள ஏற்றத் தாழ்வுகளால், புவியீர்ப்பு விசையில் மாறுபாடுகள் தோன்றுகின்றன. இப்படி மாறுபட்ட புவியீர்ப்பு விசை, புவியின் ஜியாய்டு வடிவுருவில் உயர்வு தாழ்வைத் தோற்றுவிக்கிறது.
ஜியாய்டு பள்ளமாக இருக்குமிடத்தை ‘ஜியாய்டு லோ’ என்பார்கள். அப்படி ஒரு பெரும்பள்ளம் இந்தியப் பெங்கடலில் இலங்கைக்குத் தெற்கே உள்ளது. 106 மீட்டர் ஆழமுள்ள இந்தப் பள்ளத்துக்கு இந்தியப் பெருங்கடல் ஜியாய்டு லோ (இந்தியப் பெருங்கடல் புவியுருப் பள்ளம் – Indian Ocean Geoid Low - IOGL) என்று பெயர். இது புவியில் உள்ள மிகப் பெரிய ஜியாய்டு பள்ளங்களில் ஒன்று.
ஏன் இந்த இடத்தில் இவ்வளவு பெரிய பள்ளம் என்பதற்கு இதுவரை எல்லோரும் ஏற்கும்படியான விளக்கம் ஏதும் சொல்லப்பட்டதில்லை. நிலவியல் துறையில் தீர்க்கப்படாத மிகப்பெரும் புதிராக இது இருந்துவந்தது.
உறையடுக்கு சலனம்
புவியின் உறையடுக்கில் வெப்பமான பொருள்கள் மேல் நோக்கியும், குளிர்ந்த பொருள்கள் கீழ்நோக்கியும் தொடர்ந்து இடம் பெயர்ந்துகொண்டே இருக்கும். இதைத்தான் உறையடுக்கு சலனம் என்பார்கள்.
நிலநடுக்க அதிர்வலைகளைப் பயன்படுத்தி, நிலநடுக்க டோமோகிரபி மாதிரியை உருவாக்கி புவியின் உட்புறத் தோற்றத்தைக் காட்டும் முப்பரிமாணப் படங்களை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கினார்கள்.
எனவே, அவர்கள் இந்தியப் பெருங்கடல் பெரும்பள்ளத்துக்கு அருகாமைப் பகுதிகளில் இதற்கான காரணத்தை தேடினார்கள். அப்போது ஆப்பிரிக்கப் பகுதிக்கு அடியில், large low-shear-velocity province (LLSVP) என்ற பகுதியில் இருந்து நகர்ந்து வரும் மென்பாறைகள் கிழக்கு நோக்கி திசைமாறி ஐஓஜிஎல்-லுக்கு அடியில் மறைவதைப் பார்த்தார்கள். இதுவே இந்தியப் பெருங்கடல் புவியுருப் பள்ளத்துக்கும், அதனால் அந்தப் பகுதியில் புவியீர்ப்பு விசை குறைவாக இருப்பதற்கும் காரணம் என்பதையும் இவர்கள் கண்டறிந்தார்கள். இந்த மென்பாறைகளின் கிழக்கு நோக்கிய நகர்வுக்கு, இந்திய புவித் தகட்டின் வேகமான இயக்கமே காரணமாக இருக்கக்கூடும் என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள்.
இது இந்தியப் புவியுருப் பள்ளத்துக்கு என்ன காரணம் என்ற ஆராய்ச்சியில் மிகப்பெரும் முன்னேற்றத்தைக் கொடுத்துள்ளது. இந்த ஆராய்ச்சியாளர்கள் எதிர்காலத்திலும் இது குறித்து தொடர் ஆய்வுகளில் ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.
- ஆ.தா.பாலசுப்பிரமணியன்