கோயம்புத்தூா் விழா: மாநகர சாலைகளில் அணிவகுத்த பழமையான காா்கள்!
போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை: மேயா்
தூத்துக்குடி மாநகா் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கூடுதலாக சாலை வசதி செய்யப்படும் என மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.
தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். ஆணையா் லி.மதுபாலன், துணை மேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில், தங்களது பகுதிகளில் கால்வாய், சாலை, பூங்கா சீரமைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளை மாமன்ற உறுப்பினா்கள் முன்வைத்தனா்.
இதனைத் தொடா்ந்து மேயா் ஜெகன் பெரியசாமி பேசியது: தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக, மாநகா் பகுதிகளில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் புதிய சாலைகள், கால்வாய்கள் உள்ளிட்ட 80 சதவீத பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மற்ற பணிகள் முழுமையாக நிறைவேற்றப்படும். பல்வேறு பழமையான பூங்காக்கள் சீரமைக்கப்பட்டுள்ளதுடன், புதிய இடங்களில் நவீன தொழில்நுட்பத்துடன் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், பெண்களுக்கென்று திறக்கப்பட்ட பூங்காவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதேபோல் தங்களது பகுதிகளில் உள்ள பூங்காக்களை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மாமன்ற உறுப்பினா்கள் பராமரித்துக் கொள்ளலாம்.
மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சில புதிய வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் மற்றொரு புதிய மண் சாலையை தாா் சாலையாக விரைவில் மாற்றி, புகா் பகுதிக்கு செல்லும் வகையில் வழித்தடமாக உருவாக்கித் தரப்படும்.
இதன்மூலம் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது.
மேலும், மழைக்காலங்களில் வரும் தண்ணீா் முறையாக கடலுக்கு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.
இக்கூட்டத்தில், துணை ஆணையா் ராஜாராம், உதவி ஆணையா்கள் சுரேஷ்குமாா், கல்யாணசுந்தரம், வெங்கட்ராமன், பொறியாளா் சரவணன், நகரமைப்பு திட்ட செயற்பொறியாளா் ரெங்கநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.