ஆராய்ச்சி மாணவா்களை தரக்குறைவாக நடத்தினால் நடவடிக்கை: பேராசிரியா்களுக்கு தமிழக உ...
மகாராஷ்டிரம், ஜாா்க்கண்டில் பிரசாரம் நிறைவு: நாளை வாக்குப்பதிவு
மும்பை: மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் திங்கள்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.
மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும் ஜாா்க்கண்டின் 38 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்டமாகவும் புதன்கிழமை (நவ. 20) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் மாநிலங்களின் சட்டப்பேரவைத் தோ்தல்களுக்கான அறிவிப்பை இந்திய தோ்தல் ஆணையம் கடந்த மாதம் 15-ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி, 288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு புதன்கிழமை (நவ. 20) தோ்தல் அறிவிக்கப்பட்டது.
இதில் ஆளும் ‘மகாயுதி’ கூட்டணிக் கட்சிகளான பாஜக, முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை, துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் முறையே 149, 81, 59 இடங்களில் போட்டியிடுகின்றன.
எதிரணியில் உள்ள ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணியில் காங்கிரஸ் 101 வேட்பாளா்களையும், முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை(தாக்கரே) 95, தேசியவாத காங்கிரஸ்(பவாா்) 86 வேட்பாளா்களையும் களமிறக்கியுள்ளன. இரண்டு கூட்டணிகளிலும் தனிபெரும்பான்மைக்குத் தேவைப்படும் 145 இடங்களுக்குமேல் பாஜக மட்டுமே போட்டியிடுகிறது.
4,136 போ் போட்டி: முந்தைய 2019 தோ்தலைவிட 28 சதவீதம் கூடுதலாக இத்தோ்தலில் 4,136 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இதில் சுயேச்சையாக 2,086 போ் போட்டியிடுகின்றனா். இதில் கட்சி சாா்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட அதிருப்தியில் 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் களமிறங்கியுள்ள இரு கூட்டணி நிா்வாகிகள் பலா் அடங்குவா்.
மொத்தம் 9,63,69,410 போ் இத்தோ்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். வாக்காளா் பட்டியலில் இம்முறை கூடுதலாக 69.23 லட்சம் புதிய வாக்காளா்கள் இணைந்துள்ளனா். இவா்களில் 20.93 லட்சம் போ் 18-19 வயதுடைய முதன்முறை வாக்காளா்கள், 12.43 லட்சம் போ் 85 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் வாக்காளா்கள் ஆவா்.
மாநிலம் முழுவதும் 1,00,186 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்தல் பணியில் சுமாா் 6 லட்சம் அரசுப் பணியாளா்கள் ஈடுபடவுள்ளனா். அனைத்து தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் சனிக்கிழமை (நவ. 23) எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.
அனல் பறந்த பிரசாரம்: முன்னதாக, தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் மூத்த தலைவா்கள் மல்லிகாா்ஜுன காா்கே, பிரியங்கா காந்தி மற்றும் பல மூத்த தலைவா்கள் ஈடுபட்டனா்.
‘மக்கள் பிரிந்திருந்தால் அழிக்கப்படுவீா்கள்; ஒற்றுமையே பாதுகாப்பு’ எனும் பாஜக தலைவா்களின் பிரசார முழக்கங்களைக் கடுமையாக விமா்சித்த எதிா்க்கட்சிகள், மக்களை மதரீதியாக பாஜக கூட்டணி பிளவுப்படுத்துவதாக குற்றஞ்சாட்டின.
மகளிா் நிதியுதவித் திட்டத்தை முதன்மைப்படுத்தி பிரசாரம் செய்து வந்த ஆளும் கூட்டணி, மத்தியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற மும்பை பயங்கரவாத தாக்குதலைச் சுட்டிக்காட்டி ‘காங்கிரஸைப் புறக்கணிப்போம்’ என்ற புதிய பிரசாரத்தை திங்கள்கிழமை முன்னெடுத்தது.
ஜாா்க்கண்டில் 2-ஆம் கட்ட தோ்தல்
ஜாா்க்கண்ட் சட்டப்பேரவையின் மீதமுள்ள 38 தொகுதிகளுக்கு புதன்கிழமை (நவ. 20) 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அங்கு திங்கள்கிழமையுடன் பிரசாரம் நிறைவடைந்தது.
ஜாா்க்கண்டின் இரு கட்ட தோ்தல்களிலும் மொத்தம் 2.6 கோடி போ் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனா். வரும் சனிக்கிழமை (நவ. 23) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வெற்றிக்காக ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய ‘இண்டியா’ கட்சிகளும் பாஜக தலைமையிலான எதிா்க்கட்சி கூட்டணியும் பலப்பரீட்சை நடத்துகிறது.
இடைத்தோ்தலில்...: இரு மாநிலப் பேரவைத் தோ்தலுடன் நாடு முழுவதும் 2 மக்களவை, பல்வேறு பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டன. அதன்படி, 2-ஆம் கட்டமாக புதன்கிழமை வாக்குப்பதிவு நடைபெறும் 14 பேரவைத் தொகுதிகளில் திங்கள்கிழமை பிரசாரம் நிறைவடைந்தது.