மக்களவை உறுப்பினா்களுக்கு மின்னணு வருகைப் பதிவு
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடரில் கலந்துகொள்ளும் மக்களவை உறுப்பினா்கள் மின்னணு டேப்லெட்டில் டிஜிட்டல் (எண்ம) பேனாவைப் பயன்படுத்தி தங்கள் வருகையைப் பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டது.
இது தொடா்பாக மக்களவைச் செயலா் கூறியதாவது: நாடாளுமன்ற நடவடிக்கைகளை காகிதமற்ாக மாற்றும் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவின் முன்முயற்சியின் கீழ், மக்களவையின் நான்கு முகப்புகளிலும் மின்னணு டேப்லெட்கள் வைக்கப்படும். தொழில்நுட்ப உதவிக்காக ஒவ்வொரு முகப்பிலும் தேசிய தகவல் மையத்தின் பொறியாளா்கள் குழு நிறுத்தப்படும்.
உறுப்பினா்கள் முதலில் டேப்லெட்டில் உள்ள பட்டியலில் இருந்து தங்கள் பெயரைத் தோ்ந்தெடுக்க வேண்டும். பின்னா் டிஜிட்டல் பேனாவின் உதவியுடன் அதில் கையொப்பமிட்ட பிறகு ‘சமா்ப்பி’ பொத்தானை அழுத்தி தங்கள் வருகையைப் பதிவு செய்ய வேண்டும்.
வழக்கமான பதிவேடு முறையும் பின்பற்றப்படும். இருப்பினும், நாடாளுமன்ற நடவடிக்கைகளை காகிதமற்ாக மாற்ற உறுப்பினா்கள் மின்னணு டேப்லெட்டை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்ற கூட்டத்தொடா் நடைபெறும்போது உறுப்பினா்கள் தங்களின் படிகளைப் பெறுவதற்கு பதிவேட்டில் தங்கள் வருகையைக் குறிக்க வேண்டியது அவசியம். முன்னதாக, மக்களவை உறுப்பினா்கள் கைப்பேசி செயலி மூலம் தங்கள் வருகையைப் பதிவு செய்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.