"மதுரையில் 100 அடி உயரத்தில் வ.உ.சி சிலை" - முதல்வருக்குப் புதிய நீதிக் கட்சித் தலைவர் கோரிக்கை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் அருகே உள்ள வ.உ.சி கலையரங்கத்தை ஒட்டி சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாருக்கு 11 அடி உயரத்தில் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் முன்னிலையில், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் சிலையைத் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசுகையில், “ஆங்கிலேய அரசை எதிர்த்தால் அனைத்தும் இழந்து விடுவோம் எனத் தெரிந்தும் இந்திய மண்ணின் விடுதலைக்காகப் பாடுபட்டவர் வ.உ.சி. முதல்வர் ஸ்டாலின் தியாகிகளை மதிக்கக் கூடியவர். வ.உ.சி போன்றவர்கள் நமக்கு முந்தைய தலைமுறையினர்.
அதற்கு முந்தைய காலத்தில் மன்னர்களாக இருந்தவர்களையும், வெள்ளையனின் ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்துப் போராடியவர்கள். ஸ்டாலின் அனைத்து தியாகிகளுக்கும் மரியாதை செலுத்துகிறார். வ.உ.சி அவர்கள் மீது முதல்வர் மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளார்.
இந்தியரால் கப்பல் ஓட்ட முடியும் என்று தூத்துக்குடியில் கப்பல் ஓட்டிய வ.உ.சி சிலையை ராஜபாளையத்தில் அமைப்பதற்கு அனுமதி கேட்டு வந்த நிலையில் முதல்வரிடம் பேசி அனுமதியை உடனடியாக வாங்கி கொடுத்தேன்” என்றார்.

அடுத்ததாகப் பேசிய புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம், ”செக்கிழுத்த செம்மல் வ.உ.சி அவர்கள் கடைசியாக சென்னை பெரம்பூரில் வாழ்ந்த வாடகை வீடு பாழடைந்து கிடக்கிறது. அதைப் புதுப்பித்து நினைவு மண்டபமாக முதல்வர் மாற்ற வேண்டும். மேலும் மதுரையில் நூறு அடி உயரத்தில் வ. உ. சி அவர்களுக்கு சிலை அமைக்க தமிழக முதல்வருக்குக் கோரிக்கை விடுக்கிறோம்.
அதே போல் பிரதமர் மோடி அவர்கள் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வ.உ.சி பெயர் சூட்ட வேண்டும். மேலும் பாராளுமன்றத்தில் வ.உ.சி அவர்களுக்கு சிலை அமைக்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வ.உ.சி அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கவும் பிரதமருக்குக் கோரிக்கை விடுக்கிறோம்" என்றார்.