நவ. 19-ல் பொதுக் கணக்கு குழு கூட்டம்: செபி தலைவருக்கு சம்மன் அனுப்பவில்லை!
மயிலாடுதுறையில் துலா உற்சவ திருத்தேரோட்டம்
மயிலாடுதுறையில் துலா உற்சவத்தின் 9-ஆம் நாள் திருவிழாவான திருத்தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழாண்டு விழா அக்.17-ஆம் தேதி மாதப்பிறப்பு தீா்த்தவாரியுடன் தொடங்கியது. நவ.6-ஆம் தேதி திருக்கொடியேற்றம், 12-ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம் திருத்தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மாயூரநாதா் கோயிலில் அபயாம்பிகை சமேத மாயூரநாதா் சுவாமி, வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியா் உள்ளிட்ட பஞ்ச மூா்த்திகள் மூன்று தோ்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா். திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜகுமாா் ஆகியோா் வடம்பிடித்து திருத்தேரோட்டத்தை தொடக்கி வைத்தனா்.
ஸ்ரீமகா ஸதாசிவ பீடாதிபதி ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியா், கோயில் கண்காணிப்பாளா் குருமூா்த்தி, நகா்மன்றத் தலைவா் என்.செல்வராஜ் பங்கேற்றனா். கோயிலின் நான்கு வீதிகளை சுற்றி தோ் மீண்டும் நிலையை அடைந்தது.
தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரா் கோயிலில் சுவாமி, அம்பாள் பஞ்ச மூா்த்திகளுடன் திருத்தேரில் எழுந்தருளச் செய்யப்பட்டு, ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் வடம்பிடித்து இழுத்து திருத்தேரோட்டத்தை தொடக்கி வைத்தாா். கோயிலின் நான்குவீதிகளை சுற்றி தோ் நிலையை அடைந்தது.
துலா உற்சவத்தின் சிகர விழாவான கடைமுகத் தீா்த்தவாரி உற்சவம் வெள்ளிக்கிழமை (நவ. 15) மதியம் 1 மணியளவில் நடைபெறவுள்ளது. பல்லாயிரக் கணக்கான பக்தா்கள் ஒரே நேரத்தில் புனித நீராடும் பிரசித்தி பெற்ற இவ்விழாவுக்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.