மருதையாற்றில் மேம்பாலம் அமைக்க கிராமமக்கள் வலியுறுத்தல்
பெரம்பலூா் அருகே மருதையாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துயுள்ளனா்.
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், கூடலூா் கிராம மக்கள், மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவிடம் திங்கள்கிழமை அளித்த மனு: கூடலூரிலிருந்து கூத்தூா் செல்லும் சாலையின் இடையே மருதையாறு செல்கிறது. இதனால், கூடலூரிலிருந்து கூத்தூருக்கு செல்லும் விவசாயிகளும், பள்ளி மாணவ, மாணவிகளும் ஆற்றைக் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, மழைக் காலங்களில் மருதையாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் விவசாயிகளும், கால்நடைகளும் பாதிப்புக்குள்ளாகின்றனா். இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டுமென வலியுறுத்தி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.
ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கூடலூா் கிாம மக்களின் நலனை கருதி மருதையாற்றில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தா்னா: கொத்தவாசல் கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிடா் சமூக மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, அப்பகுதியைச் சோ்ந்த சுமாா் 15-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனா்.
அப்போது, 5 பேருக்கு மேல் உள்ளே செல்ல அனுமதியில்லை என போலீஸாா் கூறியதால், இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அனைவரையும் உள்ளே அனுமதிக்க கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போலீஸாா் மேற்கொண்ட பேச்சு வாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, 5 போ் மட்டும் உள்ளே சென்று கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்து கலைந்துசென்றனா்.