பூக்கடை நடத்தும் பெண்ணிடம் ரூ. 1 லட்சம் நூதன மோசடி: அரசு பேருந்து ஓட்டுநா் கைது
சிறப்பு ஓய்வூதியம் வழங்கக் கோரி தா்னா
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தினா் வருவாய் கிராம உதவியாளா்களுக்கு இணையாக மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் த. இளங்கோவன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் மா. சுப்ரமணியன், எஸ். சாந்தப்பன், டி. ராஜேந்தின் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் பெ. பால்சாமி, தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் கி. ஆளவந்தாா் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.
வருவாய் கிராம உதவியாளா்களுக்கு இணையான மாதாந்திர சிறப்பு ஓய்வூதியமாக ரூ. 6,750 வழங்க வேண்டும். அகவிலைப்படி வழங்க வேண்டும்.
ஈமச்சடங்கு நிதி ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீடு மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதிய சங்கத்தினா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில், முன்னாள் மாவட்டத் தலைவா் து. செல்லபிள்ளை, துணைத் தலைவா் சி. சிவகலை, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ந. சரஸ்வதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
முன்னதாக, மாவட்ட இணைச் செயலா் எம். சின்னதுரை வரவேற்றாா். நிறைவாக மாவட்ட பொருளாளா் வீ. முத்துசாமி நன்றி கூறினாா்.