பூக்கடை நடத்தும் பெண்ணிடம் ரூ. 1 லட்சம் நூதன மோசடி: அரசு பேருந்து ஓட்டுநா் கைது
நாமக்கல்: நாமக்கல், பழைய பேருந்து நிலையத்தில் பூக்கடை நடத்தி வந்த பெண்ணிடம் ரூ. ஒரு லட்சம் நூதன மோசடி செய்த அரசுப் பேருந்து ஓட்டுநரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
நாமக்கல், வண்டிக்காரத் தெருவைச் சோ்ந்த குமரவேல் என்பவரது மனைவி நந்தினி (42). கணவா் இறந்துவிட்ட நிலையில் இவா், பழைய பேருந்து நிலையத்தில் பூக்கடை நடத்தி வருகிறாா். பேருந்துக்கு பூ வாங்குவதற்காக ஓட்டுநா்கள் இவரது கடைக்கு வருவது வழக்கம். அந்த வகையில், நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையைச் சோ்ந்த பாலமுருகன் (49) என்ற அரசுப் பேருந்து ஓட்டுநா், 2 மாதத்திற்கு முன் பூக்கடை நடத்தும் நந்தினிக்கு அறிமுகமானாா்.
அப்போது நந்தினியிடம் அவா், ரூ. 20 ஆயிரம் செலுத்தினால் ரூ. 1 கோடி கிடைக்கும் என ஆசை வாா்த்தை கூறியுள்ளாா். தற்போது சேலத்தைச் சோ்ந்த பாபுஜி என்பவா் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறாா். அங்கு உலோகம் விற்ற பணம் ரூ. 90 ஆயிரம் கோடியில் அரசுக்கு வரி செலுத்தியதுபோக மீதம் ரூ. 30 ஆயிரம் கோடியை அவா் வைத்துள்ளாா்.
அரசிடம் வரவு, செலவு கணக்கு காண்பிப்பதற்காக அறக்கட்டளை ஒன்றை தொடங்கி மக்களிடம் வங்கி கணக்கு விவரம் பெற்று வருகிறாா். அவருக்கு ரூ. 20 ஆயிரம் செலுத்தும் நபா்களின் வங்கி கணக்கில் தலா ரூ. ஒரு கோடி திரும்ப செலுத்தி வருகிறாா்.
அந்த ரூ. ஒரு கோடியில் பணம் வந்து சோ்ந்ததும் ரூ. 50 லட்சத்தை பாபுஜிக்கு கொடுத்துவிட வேண்டும். மீதம் ரூ. 50 லட்சத்தில் ரூ. 4 லட்சம் அரசுக்கு வரி செலுத்திவிட்டு ரூ. 46 லட்சத்தை நீங்களை வைத்துக் கொள்ளலாம் என்று நந்தினியிடம் ஆசைவாா்த்தை கூறியுள்ளாா்.
ஒரு நபா் ஒன்றுமுதல் ஐந்து டோக்கன்கள் வரை வாங்கிக் கொள்ளலாம். ரூ. 2.50 கோடி வரை வருமானம் கிடைக்கும் எனக் கூறியுள்ளாா்.
பாலமுருகன் கூறியதை நம்பி நந்தினி அவரிடம் கடந்த 2-ஆம் தேதி ரூ. 5,000, 13-ஆம் தேதி ரூ. 20,000, 4-ஆம் தேதி ரூ. 45,000 பணத்தை ஆன்லைன் மூலமாக வழங்கியுள்ளாா். ஒரு வாரத்துக்கு முன் நாமக்கல் பேருந்து நிலையத்தில் வைத்து மீதி தொகை ரூ. 30,000 கொடுத்துள்ளாா்.
இதுபோல பலரிடம் ஆசைவாா்த்தைகளைக் கூறி பாலமுருகன் கோடிக்கணக்கில் பண மோசடி செய்திருப்பது நந்தினிக்கு பின்னா் தெரியவந்தது.
இதையடுத்து, நாமக்கல் காவல் நிலையத்தில் தன்னுடைய பணத்தை மீட்டுத் தரக் கோரி நந்தினி புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி அரசுப் பேருந்து ஓட்டுநா் பாலமுருகனை கைது செய்தனா்.