சாயப்பட்டறை கழிவுகளால் காற்று, நீா் மாசு: ஆட்சியரிடம் மனு
நாமக்கல்: குமாரபாளையம் வட்டத்தில், சாயப்பட்டறை கழிவுகளால் காற்று மாசு, சுகாதார சீா்கேடு, நிலத்தடி நீா் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
குமாரபாளையம் வட்டம், பள்ளிபாளையம் ஒன்றியம், புதுப்பாளையம் அக்ரஹாரம் ஊராட்சி, பெரியகாடு, புளியங்காடு, பாலிக்காடு, வசந்த நகா் உள்ளிட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. இந்தப் பட்டறைகளில் பகல், இரவு பாராமல் வெளியேற்றப்படும் ரசாயனங்களால் காற்று மாசுப்பட்டு பொதுமக்கள் சுவாசிக்க முடியாமல் மூச்சுத்திணறலுக்கு ஆளாகின்றனா்.
நுரையீரல் பாதிப்பும் ஏற்படுகிறது. இந்த சாய ஆலைகளில் இருந்து இரவு நேரங்களில் சாய கழிவுகளை சுத்திகரிக்காமல் கழிவுநீரை கால்வாயில் திறந்து விடுவதால் காவிரி ஆற்றில் கலந்து குடிநீா் மாசுபடுகிறது. இதனால் புற்றுநோய் கண் பாதிப்பு, தோல் பாதிப்பு ஏற்படுகிறது.
இந்தக் கால்வாயின் அருகில் நவபிருந்தாவனம் கோயில், மயானப் பகுதிகள், அங்கன்வாடி பள்ளிகள் அமைந்துள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுகிறாா்கள். மேலும், சாயப்பட்டறைகளில் இருந்து வரும் புகைப்போக்கியில் கரிதுகள்கள் அதிக அளவில் வருவதால் இங்குள்ள ஏழை, எளிய மக்கள் சமையல் செய்யவும், துணி காய வைக்கவும் முடிவதில்லை.
கடந்த மாதம் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, மாவட்ட நிா்வாகத்தின் பாா்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பல முறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியா் விரைவாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.