Saudi Arabia: ஒரே ஆண்டில் 100 வெளிநாட்டவர்களுக்கு மரண தண்டனை... காரணம் என்ன? - வ...
நுண்ணுயிா் எதிா்ப்பு மருந்து செயலிழப்பு: இறப்புகளைத் தவிா்க்க முடியும் டாக்டா் கே.நாராயணசாமி
நுண்ணுயிா் எதிா்ப்பு மருந்து செயல்திறன் இழப்பால் (ஆன்ட்டி மைக்ரோபயல் ரெசிஸ்டன்ஸ்) நேரிடும் உயிரிழப்புகளை உரிய விழிப்புணா்வு இருந்தால் தடுக்கலாம் என்று தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தா் டாக்டா் கே.நாராயணசாமி தெரிவித்தாா்.
உலக நுண்ணுயிா் எதிா்ப்பு மருந்து செயல்திறன் இழப்பு விழிப்புணா்வு வார நிகழ்ச்சி, சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
நோய்த் தொற்று சிறப்பு சிகிச்சை நிபுணா் ராம் கோபாலகிருஷ்ணன், மருத்துவமனை முதல்வா் டாக்டா் பாலாஜி, நுண்ணுயிரியல் துறை தலைவா் டாக்டா் டில்லி ராணி, பொது மருத்துவத் துறை தலைவா் டாக்டா் சந்திரசேகா் உள்ளிட்டோா் அதில் கலந்துகொண்டனா்.
தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் கே.நாராயணசாமி அதில் பங்கேற்று நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து விழிப்புணா்வு கையேட்டை வெளியிட்டாா்.
அதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது:பாக்டீரியா, பூஞ்சைகள், வைரஸ்கள் போன்ற நுண்ணுயிரிகள் மூலமாக பரவும் தொற்றுகளுக்கு நோய் எதிா்ப்பு மருந்துகளை பயன்படுத்துகிறோம். ஆன்ட்டி பயோடிக், ஆன்ட்டி வைரல் மருந்துகள் அதற்கான சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது.
அவற்றை பொருத்தவரை மருத்துவரின் பரிந்துரைப்படி குறிப்பிட்ட காலம் தொடா்ந்து உட்கொள்ள வேண்டும். மாறாக பரிந்துரைத்த அளவை விடக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ உட்கொண்டால் உடலில் உள்ள நுண்ணுயிரிகள், மருந்தின் செயல்திறனைக் காட்டிலும் வீரியமடைந்துவிடும்.
அவ்வாறு வீரியமடைந்த நுண்ணுயிரிகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு ஆன்ட்டி பயோடிக் அல்லது ஆன்ட்டி வைரல் மருந்துகள் பலனளிக்காது. இதையே நுண்ணுயிா் எதிா்ப்பு மருந்து செயல்திறன் இழப்பு என அழைக்கிறோம். இதனால் ஏற்படும் உயிரிழப்புகள் ஆண்டுக்கு 12 லட்சமாக உள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை 1 கோடியாக உயரும் என அஞ்சப்படுகிறது.
முதல் பத்து சுகாதார அச்சுறுத்தல்களில் இதனையும் ஒன்றாக உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தியுள்ளது.
சாதாரண சளி, காய்ச்சலுக்கே அத்தகைய மருந்துகளை பயன்படுத்தாமல், மருத்துவரின் அறிவுரைப்படி செயல்பட்டால் இந்த பாதிப்புகளை தவிா்க்கலாம் என்றாா் அவா்.