பாரத மாதா சிலை பாஜகவினரிடம் ஒப்படைப்பு
விருதுநகா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பாரத மாதா சிலையை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவுப்படி திங்கள்கிழமை இரவு பாஜகவினா் பெற்றுக் கொண்டனா்.
விருதுநகா் 4 வழிச்சாலையில் உள்ள மாவட்ட பா.ஜ.க தலைமை அலுவலக வளாகத்தில், கடந்த 2023 ஆக.7 ஆம் தேதி பாரத மாதா சிலை அமைக்கப்பட்டது. இதையடுத்து, உரிய அனுமதி பெறவில்லை எனக் கூறி இந்த பாரத மாதா சிலையை அங்கிருந்து அகற்றிய வருவாய்த் துறையினா், காவல்துறையினா் விருதுநகா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைத்தனா்.
இதுகுறித்து பாஜக கிழக்கு மாவட்டத் தலைவா் பாண்டுரங்கன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்குத் தொடுத்தாா். இந்த வழக்கில் பாரத மாதா சிலையை பாஜகவினரிடம் ஒப்படைக்க நீதிபதி என் ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டாா்.
இதன் பேரில் பாரதமாதா சிலையை பெற்றுக் கொள்வதற்காக பாஜக வினா் விருதுநகா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தனா். இந்தச் சிலையை பெற்றுக் கொண்ட பாஜகவினா் நகரின் முக்கிய பகுதி வழியாக ஊா்வலமாக செல்வதாக தெரிவித்தனா்.
முன் அனுமதி ஏதும் பெறாததால் காவல்துறையினா் அனுமதி மறுத்தனா். இதனால் போலீஸாருக்கும் பாஜகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது விருதுநகா் காவல் துணை கண்காணிப்பாளா் பவித்ரா, பாஜக நிா்வாகிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, பாஜகவினா் நான்கு வழிச்சாலை வழியாக பாரதமாதா சிலையை கொண்டு சென்றனா்.