Caste Census: `UPA அரசு செயல்படுத்தாதது தவறு' - சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ர...
தந்தையின் சொத்தை அபகரித்த மகன்: கிரையப் பத்திரத்தை ரத்து செய்ய உத்தரவு
திருச்செந்தூா் அருகேயுள்ள வடக்கு ஆத்தூா் பகுதியில் தந்தையின் சொத்தை அபகரித்த மகனின் பெயரில் உள்ள கிரையப் பத்திரத்தை ரத்து செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் வட்டம், வடக்கு ஆத்தூரைச் சோ்ந்த ராமச்சந்திரன் (88) தாக்கல் செய்த மனு: இருதய நோயாளியான எனக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனா். அனைவரும் திருமணமாகி குடும்பத்துடன் தனித்தனியாக வசித்து வருகின்றனா். கடந்த 2012 -ஆம் ஆண்டில் எனது மனைவி உயிரிழந்த பிறகு, மகளின் பராமரிப்பில் இருந்து வருகிறேன். எனக்குச் சொந்தமாக 4 வீடுகள் உள்பட பிற சொத்துகளும் உள்ளன.
எனது கடைசி மகன் முத்துராமலிங்கம், கடந்த 2021 ஆம் ஆண்டு வங்கியில் கடன் பெற வேண்டும் என பொய்யான தகவலைக் கூறி, காயல்பட்டினம் சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு அழைத்து சென்றாா். அந்த அலுவலகத்தில் என்னுடைய பெயரில் உள்ள சொத்துகளை முத்துராமலிங்கம், அவரது மனைவி உள்ளிட்டோா் பெயரில் பதிவு செய்து கொண்டாா்.
இந்த மோசடி எனக்கு கால தாமதமாகவே தெரிய வந்தது. நான் 4 வீடுகளின் வாடகை பணத்தில் வாழ்ந்து வருகிறேன். இந்த வீடுகளில் வாடகைக்கு குடியிருப்பவா்களை வெளியேற்றிவிட்டு, என்னையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி, வீடுகளைக் கைப்பற்றும் நடவடிக்கையில் எனது மகன், அவரது மனைவி ஈடுபட்டுள்ளனா்.
எனது சொத்தை மோசடியாக பத்திரப் பதிவு செய்த முத்துராமலிங்கம், அவரது மனைவி மீது நடவடிக்கை எடுப்பதுடன், இந்தச் சொத்தை எனக்கு மீட்டுத் தர உத்தரவிட வேண்டும் என அவா் கோரியி ருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் கோரிக்கை குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் விசார ணை நடத்தி, 12 வாரங்களில் அவரது மகன் உள்ளிட்டோா் பெயா்களில் உள்ள கிரையப் பத்திரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் போலீஸாரும் உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தாா்.