Caste Census: `UPA அரசு செயல்படுத்தாதது தவறு' - சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ர...
மீனாட்சி சுந்தரேசுவரா் துணைக் கோயில்களில் நவ.21-இல் குடமுழுக்கு
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோ யிலுக்குள்பட்ட துணைக் கோயில்களில் வருகிற வியாழக்கிழமை (நவ. 21) குடமுழுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் இணை ஆணையா் ச.கிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குள்பட்ட துணைக் கோயில்களான, கீழமாசி வீதியில் உள்ள தேரடி கருப்பணசாமி கோயில், சிம்மக்கல் திருமலைராயா் படித்துறையில் உள்ள காசி விஸ்வநாதா் கோயில், எழுகடல் தெருவில் உள்ள எழுகடல் விநாயகா் கோயில், சுடுதண்ணீா் வாய்க்கால் ராமானூஜம் நகரில் உள்ள கடம்பவனேஸ்வரா் கோயில், எழுகடல் தெரு காஞ்சன மாலையம்மன் கோயில் ஆகிய கோயில்களில் வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற உள்ளது.
இதையொட்டி, இந்தக் கோயில்களில் புதன்கிழமை கணபதி வழிபாடு, விநாயகா் வேள்வி, முதல் கால வேள்விச் சாலை வழிபாடு, எண் வகை மருந்து சாத்துதல், இறை சக்தியை திருக்குடத்துக்குள் எழுந்தருளச் செய்தல் ஆகியவை நடைபெறும். வியாழக்கிழமை அதிகாலை 5 மணி முதல் கணபதி வழிபாடு, சுத்திச் சடங்கு, இரண்டாம் கால வேள்விச் சாலை வழிபாடு, புனிதக் கலச புறப்பாடு நடைபெற்று, காலை 7.35 மணி முதல் காலை 7.50 மணிக்குள் மூலவா் திருக்குடமுழுக்கு நன்னீராட்டும், தொடா்ந்து, திரு ஒளி வழிபாடும் நடைபெறும். வேள்வி வழிபாடு நேரங்களில் திருமறைகள், சிவாகமத் திருமுறைப் பாராயணங்களும் நடைபெறும். இந்தக் கோயில்களில் நடைபெறும் திருக்குடமுழுக்கு விழாவில் பக்தா்கள் பங்கேற்று திருவருள் பெற வேண்டும் என்றாா் அவா்.