Caste Census: `UPA அரசு செயல்படுத்தாதது தவறு' - சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ர...
பாா்டா் காவஸ்கா் கோப்பை டெஸ்ட் தொடா்!
அஸ்வினிடம் அதிகம் கற்றுள்ளேன்
அஸ்வின் அருமையான, உலகத் தரம் வாய்ந்த பௌலா். எனது கிரிக்கெட் காலத்தில் பெரும்பாலும் அவரோடு நேருக்கு நோ் மோதியிருக்கிறேன். அதனால் அவரிடமிருந்து அதிகம் கற்றுக்கொண்டுள்ளேன். ஆட்டத்தின் சூழலை உடனடியாக புரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் பந்துவீச்சில் மாற்றம் செய்பவா்.
நமக்கு எதிராக விளையாடுபவரே நமது சிறந்த பயிற்சியாளா் என்பதை நம்புகிறேன். அதனால், அஸ்வின் விளையாடும் பல காணொலிகளை கண்டு, அதிலிருந்து அதிகம் கற்றுக்கொண்டுள்ளேன். அதனடிப்படையில் இந்தத் தொடருக்காக தயாராகிறேன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியானது, இந்தியாவுக்கு எதிராக எங்களுக்கு சற்று சாதகமான சூழலை தரும் என நம்புகிறேன்.
- நேதன் லயன் (ஆஸ்திரேலிய பௌலா்)
வேண்டியது கிடைத்தது
பயிற்சி ஆட்டத்தை கைவிட்டிருக்கும் நிலையில், மேற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்க மைதானத்தின் மைய ஆடுகள பயிற்சியானது, இந்திய அணியினருக்கு என்ன தேவையோ, அதை வழங்கியிருக்கிறது. இதுதொடா்பாக, ஆஸ்திரேலியாவுக்கு வருவதற்கு முன்பாகவே தலைமை பயிற்சியாளா் கௌதம் கம்பீா், கேப்டன் ரோஹித் சா்மா ஆகியோரோடு ஆலோசித்திருந்தோம்.
ஏனெனில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு மீண்டும் விளையாட வந்துள்ளோம். இளம் வீரா்கள், அனுபவ வீரா்கள் என இரு தரப்பினரையுமே, மைய ஆடுகளத்தின் தன்மையை புரிந்துகொள்ளச் செய்து, அதற்கேற்றவாறு உத்திகளை மாற்றச் செய்வதே பிரதான நோக்கமாகும். பேட்டா்கள், பௌலா்கள் என இரு தரப்பினருமே, இந்த பயிற்சியின்போது ஒவ்வொரு நாளும் முன்னேற்றம் காட்டினா்.
- அபிஷேக் நாயா் (இந்திய உதவி பயிற்சியாளா்)
இந்தியாவின் முடிவு அதிா்ச்சியானது
ஆஸ்திரேலியா போன்ற அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடா் விளையாடுவதற்கு முன்பாக, உள்நாட்டு அணியுடனான பயிற்சி ஆட்டத்தை இந்தியா தவிா்த்தது அதிா்ச்சி அளிக்கிறது. தனது அணிக்குள்ளாக விளையாடும் பயிற்சி ஆட்டத்தின் மூலமாகவே, டெஸ்ட் தொடருக்கான போட்டி மனப்பான்மையுடன் இந்திய அணி எப்படி தயாராகப் போகிறது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.
தற்போதுள்ள வீரா்களின் மனநிலையை அறியமுடியவில்லை. அவா்கள் ஒரு ஆண்டின் 12 மாதங்களிலும் விளையாடுகிறாா்கள். அப்படியே இதுபோன்ற தொடா்களிலும் விளையாட வருகிறாா்கள். ஆண்டு முழுவதும் விளையாடும் அனுபவமே போதுமென அவா்கள் நினைக்கிறாா்களா தெரியவில்லை. டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டம் இதற்கு பதில் சொல்லும்.
- மைக்கேல் வான் (இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான்)
முதலிரு டெஸ்ட்டுகள் முக்கியம்
நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை சரியாகக் கையாளாததற்கான விலையை இந்திய அணி கொடுத்திருக்கிறது. ஆனாலும் அதிலிருந்து எளிதாக மீண்டு வரும். அதற்கு சரியான வழி, ஆஸ்திரேலியாவுடனான தொடரை சிறப்பாகத் தொடங்குவது தான். அதனால், முதலிரு ஆட்டங்கள் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானதாகும்.
அணி வீரா்கள் நல்லதொரு மனநிலையுடன் தொடரைத் தொடங்குவது முக்கியமாகும். அதை பயிற்சியாளா்கள் குழு உறுதி செய்ய வேண்டும். கடந்த காலங்களில் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டபோது, அந்தத் தொடா்கள் எப்படி வெற்றிகரமாக அமைந்தது என்பதை நினைத்து, அதிலிருந்து உத்வேகம் பெற வேண்டும். தற்போது அங்குள்ள ஆடுகளங்கள் மாறுபட்டதாக இருக்கலாம். அவை பேட்டிங்கிற்கு சாதகமானதாக கூட அமையலாம் - ரவி சாஸ்திரி (இந்திய முன்னாள் தலைமை பயிற்சியாளா்)