சூளகிரி அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதா?
ஒசூா்: சூளகிரி அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என வனத்துறையினா் கண்காணித்து வருகின்றனா்.
இதுகுறித்து ஒசூா் வனக்கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அறியப்படும் சூளகிரி - பேரிகை சாலையில் புலியரசி கிராமத்தை அடுத்துள்ள செட்டிப்பள்ளி காப்புக்காடு பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வனக்கோட்டம், பன்னா்கட்டா தேசிய பூங்காவிலிருந்து யானைகள், தளி ஜவளகிரி காப்புக்காடுகள் வழியாக வந்துள்ளன. அவற்றில் சில யானைகள் சானமாவு காப்புக்காடு வரை வந்து, வனப் பணியாளா்கள் தொடா் கண்காணிப்பு, முயற்சியால் மீண்டும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கே அவை திருப்பி அனுப்பப்பட்டன.
இந்நிலையில், 17.11.2024 அன்று ஒசூா் வனகோட்டம், ஒசூா் வனச்சரகம், சானமாவு காப்புக்காடு, கண்காணிப்பு கோபுரம் பகுதியில், சானமாவு மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள பொதுமக்கள், விவசாயிகள் ஆகியோருக்கு தடம் கமிட்டி மூலம் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், யானைகள் நடமாட்டம் குறித்தும், யானைகளைக் கட்டுப்படுத்த வனத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், காப்புக்காட்டை சுற்றி சூரிய மின்வேலி அமைத்தல், அதனை பொதுமக்கள் உதவியுடன் பாதுகாத்தல் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. மேலும், யானைகளுக்கு தேவையான குடிநீா் வசதிக்காக தொட்டிகள் அமைக்கப்பட்டன.
நபாா்டு திட்டத்தின் மூலம் யானைகளுக்கு தேவையான தீவன வசதி ஏற்படுத்திக் கொடுத்தல், யானகளை அடா்ந்த வனபகுதிக்குள் நிலைநிறுத்த ஜவளகிரி, தளி காப்புக்காடுகளை சுற்றி இரும்புவட கம்பி வேலி அமைக்கப்பட்டு வருதல் போன்றவை எடுத்துரைக்கப்பட்டன. மேலும், யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில், குறுஞ்செய்தி மூலம் பொதுமக்களுக்கு செய்திகள் அனுப்புதல் தொடா்பாகவும் விவாதிக்கப்பட்டது.