முதன்முறையாக கோ-கோ உலகக் கோப்பை: 2025-இல் இந்தியாவில் நடைபெறுகிறது
200 தொகுதிகளில் வெற்றிபெற ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
கிருஷ்ணகிரி: 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் 200 தொகுதிகளில் வெற்றிபெற ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி பேசினாா்.
கிருஷ்ணகிரியில் கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு மாவட்ட அவைத் தலைவா்கள் தட்ரஅள்ளி நாகராஜ் (கிழக்கு), யுவராஜ் (மேற்கு) ஆகியோா் தலைமை வகித்தனா். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்), கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த நிகழ்வில் அமைச்சா் அர.சக்கரபாணி பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு துணை முதல்வா் டிச. 5-ஆம் தேதி வருகை தர உள்ளாா். அவரை வரவேற்க சாலைகள்தோறும் திமுக கொடியுடன் மக்கள் திரள வேண்டும். பதாகைகள், சால்வைகள் கூடாது. நவ. 27-ஆம் தேதி உதயநிதி பிறந்த நாள், மாா்ச் 1-இல் முதல்வா் ஸ்டாலின் பிறந்த நாள், ஜூன் 3-இல், கருணாநிதி பிறந்தநாள் என தொடா் நிகழ்ச்சிகள் வருகின்றன. அதன்படி தற்போது நாம் பிடிக்கும் ஒவ்வொரு சுவா் விளம்பரங்களிலும் இவை இடம்பெற வேண்டும்.
நடந்த முடிந்த மக்களவைத் தோ்தலில் தமிழக முதல்வா் ஸ்டாலின், தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் வெற்றி என சொல்லியபடி வென்றாா். தற்போது, தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் 200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கை நிா்ணயித்துள்ளாா். அதையும் நாம் பெற ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்; திண்ணைப் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் திமுக வெற்றிபெற வேண்டும் என்றாா்.