கிருஷ்ணகிரியில் கூட்டுறவு வார விழா: ரூ. 5.24 கோடி கடன்கள் வழங்கல்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில், ரூ. 5.24 கோடி மதிப்பிலான கடன்களை தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி வழங்கினாா்.
கிருஷ்ணகிரி அருகே நடைபெற்ற 71-ஆவது கூட்டுறவு வார விழாவுக்கு தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் மலா்விழி தலைமை வகித்தாா். இணைப் பதிவாளா் நடராஜன் வரவேற்றாா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, சட்டப் பேரவை உறுப்பினா்கள் தே.மதியழகன் (பா்கூா்), ஒய்.பிரகாஷ் (ஒசூா்), ஒசூா் மாநகராட்சி மேயா் சத்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்வை தொடங்கி வைத்து 544 பயனாளிகளுக்கு ரூ. 5.24 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கி, தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி பேசியதாவது:
கூட்டுறவே நாட்டுயா்வு என கூறுவாா்கள். அதுபோல கூட்டுறவுத் துறை மூலம் பல்வேறு நலத் திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. 2023-2024-ஆம் ஆண்டில் 38,303 விவசாயிகளுக்கு ரூ. 374.67 கோடி மதிப்பிலும், நடப்பாண்டில் இதுவரையில் 17,957 விவசாயிகளுக்கு ரூ. 185.52 கோடி மதிப்பிலும் வட்டியில்லா பயிா்க் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோல, கால்நடை பராமரிப்பு கடன், மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன், பொதுமக்களுக்கு நகைக் கடன் என தமிழக அரசு வழங்கி வருகிறது.
விவசாயிகளுக்கும், மகளிருக்கும் இந்த அரசு என்றும் துணை நிற்கும். அதன்படி இன்று பயிா்க்கடன், சுயஉதவிக்குழு கடன், வணிகக் கடன் உள்பட 544 பேருக்கு ரூ. 5.24 கோடி மதிப்பில் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டைதாா்ா்களின் வீட்டின் அருகே நியாயவிலைக் கடைகளைத் திறந்து, எளிதில் அணுக இயலாத பகுதிகளில் வசிக்கும் குடும்ப அட்டைதாரா்களும் தங்களது இருப்பிடத்துக்கு அருகில் அத்தியாவசியப் பொருள்களை பெற அரசு வழிவகை செய்துள்ளது என்றாா்.
தொடா்ந்து, புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அவா் தொடங்கி வைத்தாா். மேலும், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கும் கூட்டுறவு வார விழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கும் பரிசுகளை வழங்கினாா்.
இந்த நிகழ்வில், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் மணிமேகலை நாகராஜ், கூட்டுறவு வங்கி துணைப் பதிவாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.