திருவேற்காடு: கோலடி ஆக்கிரமிப்பு; தற்கொலை செய்துகொண்ட தச்சு தொழிலாளி... போராட்டத...
``மாணவர்கள் பேசாமல் இருக்க வாயில் டேப்'' - அரசுப் பள்ளி தலைமை ஆசிரிய மீது பெற்றோர் புகார்!
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள அய்யம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில், தலைமை ஆசிரியராக புனிதா என்பவர் பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த பல மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அய்யம்பட்டி கிராமத்தை சேர்ந்த கனிஷ் வர்மா, நிதிஷ், கவின், ரோஷன், சஷ்மிதா ஆகியோர் நான்காம் வகுப்பு படிக்கின்றனர்.
தலைமை ஆசிரியர் புனிதா, இந்த ஐந்து மாணவர்கள் வாயில் செல்லோ டேப்பை ஒட்டி, இரண்டு மணி நேரம் வகுப்பறையில் உட்கார வைத்திருந்தாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் போட்டோ ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பெற்றோர் தரப்பில் கூறுகையில், வகுப்பில் மாணவர்கள் ஒருவருக்கொருவர் பேசாமல் இருக்க தலைமை ஆசிரியர் புனிதா, மாணவர்கள் வாயில் பெரிய செல்லோ டேப்பை ஒட்டி வந்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 21-ம் தேதி இதே போல் ஒரு மாணவி உள்பட ஐந்து மாணவர்களின் வாயில் செல்லோ டேப்பை ஒட்டி மதிய சாப்பாட்டு நேரம் வரும் வரை உட்கார வைத்துள்ளார். இதை தாங்க முடியாத அதே பள்ளியில் பணி புரியும் ஆசிரியர் ஒருவர் இது தப்புனு சொல்லியும் கேட்காமல் தலைமை ஆசிரியர் இதை செய்ததாக தெரிகிறது.
மாணவர்கள் வாயில் டேப் ஒட்டப்பட்ட போட்டோவும் எங்களுக்கு கிடைத்தது. அதிர்ச்சியடைந்து இது குறித்து நாங்கள் தலைமை ஆசியரிடம் கேட்டதற்கு முறையான பதில் சொல்லவில்லை. இனிமேல் இது போல் நடக்காது எனவும் சொல்லவில்லை. இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம்" என்றனர்.
இது குறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மதியழகன் கூறியதாவது, "ஆசிரியர் வகுப்பில் இல்லாததால் ஒரு மாணவனை வகுப்பை கவனித்து கொள்ள கூறியுள்ளார்கள். அந்த மாணவன் தான் வகுப்பறையில் பேசிய மாணவர்களின் வாயில் டேப் ஒட்டியுள்ளான். ஆசிரியர்கள் ஒட்டவில்லை என தெரிகிறது. இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
புகார் குறித்து பள்ளித் தலைமையாசிரியை புனிதா கூறியதாவது, "கடந்த 21-ம் தேதி வகுப்பில் மற்றொரு ஆசிரியை வராததால், மாணவர்களே வகுப்பை கவனித்து கொண்டனர். அப்போது, யாரிடமும் பேசகூடாது என்பதற்காக மாணவர்களே விளையாட்டாக வாயில் செல்லோ டேப்பை ஒட்டியுள்ளனர். நான் அந்த வகுப்புக்கு சென்ற போது, ஒரு மாணவன் வாயில் ம்ட்டும் டேப் ஒட்டப்பட்டிருந்தது. நான் அதை அகற்ற சொல்லி விட்டேன். மாணவர்கள் வாயில் டேப் ஒட்டப்பட்டிருந்ததை சிலர் போட்டோ எடுத்துள்ளனர். இந்த சம்பவத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பு இல்லை. என்னிடமும், மாணவர்களிடமும் கல்வி அலுவலர் விசாரணை நடத்தியுள்ளார்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88