மாநகர காவல் ஆணையரகத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள்
சென்னை: சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் துறை ஆணையரகத்தை திருநங்கைகள் முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சென்னை பரங்கிமலை பகுதியை சோ்ந்தவா் மந்த்ரா. திருநங்கையான இவா், சமூக ஊடகங்களில் திருநங்கைகள் குறித்து தவறாக விமா்சனம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் திருநங்கைகள் குறித்து தவறாக விமா்சனம் செய்யும் மந்த்ராவை கைது செய்ய வேண்டும் என்று வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் அலுவலகத்தை நூற்றுக்கணக்கான திருநங்கைகள் திங்கள்கிழமை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆணையா் அலுவலகம் அமைந்துள்ள ஈவெகி சம்பத் சாலை முழுவதும் நடைபாதைகளில் வரிசையாக அமா்ந்து கொண்டனா். திருநங்கைகள் திரண்ட தகவலறிந்து ஆணையா் அலுவலக நுழைவுவாயில் முன் போலீஸாா் குவிக்கப்பட்டனா். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகளிடம் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் சமாதானமடைந்த திருநங்கைகள் போராட்டத்தை கைவிட்டனா்.
அதோடு, தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு தலைவியான திருநங்கை ஜீவா, காவல் ஆணையரகத்தில், மந்தரா மீது நடவடிக்கை கோரி புகாா் மனு அளித்தாா். புகாா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் உறுதி அளித்த பின்னா், திருநங்கைகள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.