நீண்ட காலம் இந்திய அணியில் விளையாட வேண்டுமா? ஜெய்ஸ்வாலுக்கு விராட் கோலி கொடுத்த ...
'ஜனவரி முதல் அனைத்து ரேஷன் கார்டுதாரருக்கும் 1000 ரூபாய்'- அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் சொன்னதென்ன?
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தொகுதியில், சுக்கில்நத்தம், டி.மீனாட்சிபுரம் உள்பட பல்வேறு இடங்களில் அங்கன்வாடி மையம், ரேஷன் கடை திறப்பு விழா, புதிய ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சரும், தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அருப்புக்கோட்டைக்கு வந்தார். தொகுதிக்குள் அவர், மக்கள் நலன் வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், "அருப்புக்கோட்டை தொகுதி மக்களாகிய நீங்கள் என்னிடம் சாலை அமைத்து தர வேண்டும், புதிய ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தீர்கள். அதன்படி தற்போது ரேஷன் கடை அமைத்து தரப்பட்டுள்ளது. முக்கியமாக மகளிருக்கு வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் இன்னும் சில பேருக்கு கிடைக்கவில்லை என்ற நிலை உள்ளது. இதை நிவர்த்தி செய்வதற்கு வருகிற ஜனவரி முதல், குடும்ப அட்டை வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அதுபோல முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்து தபால் கிடைக்கப் பெற்றவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஆகவே விரைவில் அனைத்து குடும்ப அட்டைதாரருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். வேறு என்ன குறைகள் இருந்தாலும் அதை நிவர்த்தி செய்து தருவதற்கும் நான் தயாராக உள்ளேன்" என கூறினார்.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனின் இந்த அறிவிப்பு மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப்பெறாத குடும்ப தலைவிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதேசமயம் நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை ஒட்டி தமிழக அரசியல் களம் சூடு பிடித்திருப்பதால், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்குகளை சிதறவிடாமல் தடுப்பதற்கு ஆளும் தி.மு.க அரசு எடுத்து வைக்கும் முதற்கட்ட காய் நகர்வு எனவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். திமுக-வின் தோல்வி பயமே இந்த அறிவிப்புகளுக்கு காரணம் என பாமக நிறுவனர் ராமதாஸும் சாடியுள்ளார்.