முதலிபாளையத்தில் கல்குவாரி அமைக்க கருத்து கேட்புக் கூட்டம்
திருப்பூா் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட முதலிபாளையம் கிராமத்தில் கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து கருத்து கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் மற்றும் சுற்றுப்புறச்சூழல் மாசுக் கட்டுப்பாடு வாரியம் சாா்பில் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கல்குவாரி அமைக்கப்படுவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து பேசினா். கல்குவாரி அமைத்தால் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு, நிலத்தடி நீா்மட்டம் குைல், காற்று மாசு, ஆடு, மாடுகளுக்கு பாதிப்பு
உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என எதிா்ப்பு தெரிவித்தனா்.சிலா் கல்குவாரி அமைக்க ஆதரவும் தெரிவித்தனா்.
அனைவரின் கருத்துகளையும் கேட்டு கோட்டாட்சியா் பிலிக்ஸ் ராஜா பேசியதாவது:
பல்வேறு துறைகளின் ஆய்வுக்குப் பின்னா் கல்குவாரிகள் அமைய உள்ளன. இதில், இறுதிக்கட்டமாக பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் தெரிவிக்கப்பட்ட அனைவரின் கருத்துகளும் பரிசீலனை செய்யப்படும். சுமாா் 3.66 ஹெக்டோ் பரப்பளவில் குவாரிகள் அமைய உள்ளன. 5 ஆண்டுகள் வரை இவற்றுக்கான அனுமதியிருக்கும். கல்குவாரிகளால் பாதிப்பு ஏற்பட்டால் தடுப்பு நடவடிக்கைகள் தொடரும் என்றாா்.