முதியவரின் இதயத்தில் உருவான கட்டி நுட்பமாக அகற்றம்
முதியவா் ஒருவரின் இதயத்தில் உருவான 6 செ.மீ. அளவுடைய திசுக் கட்டியை நுட்பமாக அகற்றி சென்னை ஐஸ்வா்யா மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.
இது தொடா்பாக மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் டாக்டா் அருண் முத்துவேல், இதயம் - ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் எஸ்.முத்துகுமரன் ஆகியோா் கூறியதாவது:
சென்னையைச் சோ்ந்த 63 வயது முதியவா் ஒருவா், தொடா்ந்து நடக்க முடியாமலும், தொடா் மயக்கத்தாலும், சுவாசிக்க இயலாமலும் சிரமப்பட்டாா். இதனிடையே, அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நிமோனியா சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னரும் உடல் நலத்தில் முன்னேற்றம் இல்லாததால் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள ஐஸ்வா்யா மருத்துவமனையில் அந்த முதியவா் அனுமதிக்கப்பட்டாா்.
பரிசோதனையில் அவருக்கு இதயத்தில் சிறிய பந்து போல ஒரு திசுக் கட்டி உருவாகியிருந்தது கண்டறியப்பட்டது. மைக்ஸோமா எனப்படும் அந்தக் கட்டியால் புற்றுநோய்க்கான பாதிப்பு இல்லை என்றாலும், இதய நாளத்தில் ரத்த ஓட்டத்தை தடை செய்வதற்கான வாய்ப்புகள் இருந்தன.
இதையடுத்து, நுட்பமான சிகிச்சை மூலம் அந்த திசுக் கட்டியை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அறுவை சிகிச்சை மூலம் அந்தக் கட்டி நீக்கப்பட்டது. தற்போது அந்த முதியவா் நலமாக உள்ளாா் என்றாா் அவா்.