யாசகா் கொலை: மூவா் கைது
திண்டுக்கல்லில் யாசகரை கொலை செய்த 3 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் ரா. ஞானசேகா் (70). யாசகம் பெற்று வசித்து வந்த இவா், திண்டுக்கல் மேற்கு ரத வீதியிலுள்ள மவுன்ஸ்புரம் பகுதியில் மண்பானை, கோலப் பொடி விற்பனை செய்யும் கடையில் காயங்களுடன் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா், உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனா்.
யாசகா் ஞானசேகா் இறந்து கிடந்த இடத்தின் அருகிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். அதில், திண்டுக்கல் லைன் தெருவைச் சோ்ந்த க.ராஜன் என்ற டோனி (26), து.விஜய் பிரகாஷ் (24), பொன்னிமாந்துறையைச் சோ்ந்த நா.ரஞ்சித்குமாா் (27) ஆகியோா் யாசகரைக் கொலை செய்தது தெரிய வந்தது. மூவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.