சட்டவிரோதமாக குடியேறிய 900 வங்கதேசத்தினர்! விரைவில் நாடுகடத்தல்!
ராட்சத ராட்டினத்தில் கோளாறு: பொழுதுபோக்குப் பூங்காவைத் திறக்க தற்காலிகத் தடை!
சென்னையில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் ராட்சச ராட்டினம் பழுதாகி அதில் மக்கள் சிக்கித் தவித்த நிலையில் பொழுதுபோக்கு பூங்காவை தற்காலிகமாக திறக்க காவல்துறை தடை விதித்துள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஈஞ்சம்பாக்கம் பகுதியில் தனியார் கேளிக்கை பொழுதுபோக்கு பூங்கா செயல்பட்டு வருகிறது, இங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் சென்று பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களில் விளையாடி பொழுதை கழித்து வருகின்றனர்,
இந்தநிலையில் நேற்று இரவு 7மணியளவில் பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள ராட்சச ராட்டினத்தில் 35 நபர்கள் ஏறி அமர்ந்து சுற்றியுள்ளனர். அப்போது ராட்டினம் பழுதாகி செங்குத்தாக சுமார் 150 அடியில் நின்றது. இதனால் அதில் இருந்த 35 நபர்களும் கீழே இறங்க முடியாமல் சுமார் 3 மணி நேரம் சிக்கி தவித்தனர்.
பூங்கா நிர்வாகத்தினர் ராட்சச ராட்டினத்தில் ஏற்பட்ட பழுதை நீக்க முடியாமல் சிரமப்பட்டனர். இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததன் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ராட்சச மின்தூக்கிகள் மூலம் சென்று 35 பேரையும் பத்திரமாக மீட்டனர்,
மேலும் அங்கிருந்த மக்களும், ராட்சசராட்டினம் பழுதாகி நின்றவுடன் பூங்கா நிர்வாகம் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என காவல்துறையிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் யாருக்கும் எந்தவிதமான காயங்களும் பாதிப்பும் ஏற்படவில்லை என தீயணைப்பு துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சோர்வாக இருந்த சிலருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கேளிக்கை பொழுதுபோக்கு பூங்காவில் உரிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதா என சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் காவல்துறையும் இணைந்து ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
மேலும் பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விளக்கம் கேட்டு பூங்கா நிர்வாக மேலாளருக்கு நீலாங்கரை போலீசார் நோட்டீஸ் ஒன்றை வழங்கி உள்ளனர். மேலும் ராட்சச ராட்டினம் பழுதாகிய காரணம் குறித்தும், பூங்காவில் பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் முறையாக உள்ளதா, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதா, பூங்கா முறையாக பராமரிக்கப்படுகிறதா எனவும் விளக்கம் கேட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ளும் வரை பொழுதுபோக்கு பூங்காவை தற்காலிகமாக திறக்க காவல் துறையினர் தடை விதித்துள்ளனர். மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வில் முறைகேடுகள் இருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.