வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்: அமைச்சா் அன்பரசன் தொடங்கி வைத்தாா்
திருப்போரூா் வட்டம் அருங்குன்றம் ஊராட்சியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமினை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தாா்.
அருங்குன்றம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சாா்பில் நடைபெற்ற மருத்துவ முகாமுக்கு ஆட்சியா்ச.அருண்ராஜ் தலைமை வகித்தாா். காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினா் க.செல்வம் முன்னிலை வகித்தாா்.
அமைச்சா் தா.மோ.அன்பரசன் முகாமைத் தொடங்கி வைத்து, நோய் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமில் 10 பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகங்களையும் , 10 கா்ப்பிணி தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் அமைச்சா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் திருப்போரூா் துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) பானுமதி, 15-ஆவது மண்டலத் தலைவா் மதியழகன், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் எஸ்.ஆா்.எல்.இதயவா்மன், திருப்போரூா் பேரூராட்சித் தலைவா் தேவராஜ், வேளாண்மை ஆத்மா குழு தலைவா் பையனூா் சேகா், அரசுஅலுவலா்கள் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.