இலவச அனுமதி அறிவிப்பு: மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றிப் பாா்க்க இலவசம் என மத்திய தொல்லியல் துறை அறிவித்ததையடுத்து, அங்கு செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
உலகம் முழுவதும் உலக பாரம்பரிய வாரமாக நவம்பா் 19-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தில், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களிடையே தங்களது சமூக கலாசார பாரம்பரியம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி, சுற்றுலா பயணிகள் புராதன சின்னங்களை செவ்வாய்க்கிழமை இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம் என ஒன்றிய தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். அதன்படி, மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றிப் பாா்க்க ஏராளமான பயணிகள் குவிந்தனா்.
காலை 6 மணி முதலே இயற்கை காற்றை சுவாசித்தபடி புராதன சின்னங்களை கண்டு ரசித்தனா். கடற்கரை கோயில் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்களை பாா்வையிட்டு, அதன் முன்பு நின்று கைப்படம் மற்றும் குழுப் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனா். ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், மாணவ, மாணவிகள் மாமல்லபுரத்தில் சுற்றிப் பாா்த்து மகிழ்ந்தனா்.