திறமையை வீணடிக்காதே..! இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கிய பீட்டர்சன்!
Bumrah: `நான் மித வேகபந்துவீச்சாளரா?!' - ஆஸியில் பத்திரிகையாளர் கேள்விக்கு கேப்டன் பும்ரா பதிலடி
இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் நாளை ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. முதல் முறையாக ஐந்து போட்டிகள் கொண்டதாக இது நடைபெறவிருக்கிறது. கடைசியாக, மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி 2014-ல் சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரை வென்றிருந்தது. அதன் பின்னர், நடைபெற்ற நான்கு தொடர்களிலும் இந்திய அணியே வென்றிருக்கிறது.
இதனால், விட்ட இடத்திலிருந்தே மீண்டும் வெற்றிக் கணக்கை ஆரம்பிக்க வேண்டும் என சொந்த மண்ணில் காத்திருக்கிறது ஆஸ்திரேலியா அணி. மறுபக்கம், கடந்த ஆண்டு தனது சொந்த மண்ணில் நம்மை வீழ்த்தி உலகக் கோப்பையைத் தட்டிச் சென்ற பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, அவர்கள் மண்ணில் ஹாட்ரிக் தொடர் வெற்றியைப் பதிவுசெய்யச் சென்றிருக்கிறது இந்திய அணி.
இத்தகைய எதிர்பார்ப்புகளுடன், தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தப் போட்டியில் ரோஹித் பங்கேற்க மாட்டார் என்பதால், இந்தியாவின் பவுலிங் யூனிட்டை முன்னின்று வழிநடத்தக்கூடிய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணியின் கேப்டனாகச் செயல்படவிருக்கிறார்.
இந்த நிலையில், இந்திய அணியின் கேப்டனாக போட்டிக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த பும்ரா, ``நாங்கள் இங்கு முன்கூட்டியே வந்துவிட்டதால் நன்கு தயாராகியிருக்கிறோம். இதற்கு முன் நாங்கள் இங்கு முதன்முறையாக வந்தபோது, இதைவிட குறைவான நேரமே கிடைத்தது. இருப்பினும் அந்தத் தொடரை வென்றோம். இளம் வீரர்கள் நிறைய பேர் இங்கு முதல்முறையாக வந்திருக்கிறார்கள்.
நாங்கள் எப்போதும் நம்பிக்கையுடனும், உறுதியுடனும் இருக்கிறோம். நாங்கள் விளையாடுகையில் என்ன மாதிரியான சூழல் நிலவினாலும், அதற்குத் தயாராவதில் எப்போதும் சரியான இடத்தில் நாங்கள் இருந்திருக்கிறோம். இனி எல்லாம் உளவியல் ரீதியாகச் செயல்படு பற்றியதுதான். அதை நாங்கள் செய்ய விரும்புகிறோம்." என்று கூறினார். அதைத்தொடர்ந்து பத்திரிகையாளர் ஒருவர், ``ஒரு மித வேகப்பந்துவீச்சாளராக இந்திய அணிக்கு கேப்டனாக செயல்படுவது எப்படியிருக்கிறது" என பும்ராவால் வேகமாக பந்து வீச முடிவதில்லை என்னும் பொருள்பட கேள்வியெழுப்பினார்.
அதற்கு, ``என்னால் மணிக்கு 150 கி.மீ வேகத்தில் பந்துவீச முடியும். குறைந்தபட்சம் வேகப்பந்துவீச்சாளர் கேப்டன் என்று கூறுங்கள்" எனப் பதிலளித்து வாயடைத்தார் பும்ரா. இத்தகைய பதிலை சற்றும் எதிர்பாராத அந்தப் பத்திரிகையாளர், அந்தக் கேள்வி ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸுக்கும் பொருந்தும் என்று இந்தப் பதிலுக்குப் பின்னர் உணர்ந்திருக்கலாம்.
பும்ரா இதற்கு முன்னர், 2022-ல் இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை தொடங்கும் இந்தத் தொடரில் யார் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவார், யார் அதிக ரன்களை அடிப்பார் என்பது குறித்த உங்களின் கணிப்பைக் கமெண்டில் பதிவிடுங்கள்!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...