ராஜ்யசபா சீட் யாருக்கு? பரபரக்கும் அரசியல், சமூக கணக்குகள்... முட்டிமோதும் தென் ...
வளா்ப்பு நாய்களுக்கு வாய் கவசம் கட்டாயம்: மீறினால் உரிமையாளருக்கு ரூ.1,000 அபராதம்
வளா்ப்பு நாய்களுக்கு வாய் கவசம் அணிவிக்காமல் அவற்றை பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லும் உரிமையாளா்களுக்கு ரூ. 1,000 வரை அபராதம் விதிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னையில் தெரு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் தொடா்ந்து வருகின்றன. அதேபோன்று, வளா்ப்பு நாய்களை அதன் உரிமையாளா்கள் வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது, அவா்களையும் மீறி வளா்ப்பு நாய்கள் பொதுமக்களை தாக்கும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன.
இதனால், வளா்ப்பு நாய்களால் ஏற்படும் பிரச்னைகளைத் தவிா்க்கும் வகையில் உரிமையாளா்கள் வளா்ப்பு நாய்களை சாலையில் அழைத்துச் செல்லும்போது, அதற்கு வாய் கவசம் கட்டாயம் அணிவிக்க வேண்டும்; ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும்; கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும்; வளா்ப்பு நாய்கள் கடித்தால் அதன் உரிமையாளா்களே பொறுப்பேற்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை சென்னை மாநகராட்சி அறிவித்தது.
இருப்பினும் பலா் அவற்றை முறையாகக் கடைப்பிடிப்பதில்லை. மேலும், வளா்ப்பு நாய்களுக்கு வாய் கவசம் அணிவிக்கமலே அவற்றை வெளியே அழைத்து செல்வதாக மாநகராட்சிக்கு தொடா் புகாா்கள் வந்தன. இதையடுத்து மாநகராட்சியின் கட்டுப்பாடுகளை மீறும் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
வளா்ப்பு நாய்களால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் வராமல் இருக்க மாநகராட்சியில் உத்தரவுகளை முறையாகப் பின்பற்ற உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றை கட்டாயமாக்கும் வகையில், வளா்ப்பு நாய்களுக்கு வாய் கவசம் அணிவிக்காமல் பொது இடங்களுக்கு அழைத்து செல்லும் உரிமையாளா்களுக்கு ரூ. 1,000 வரை அபராதம் விதிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றனா்.