விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்
விழுப்புரம் மாவட்டத்தின் 9 வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (டிச.14) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் சி.பழனி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வழங்கும் வகையில், அனைத்து வட்டாட்சியா் அலுவலகத்திலும் தனி வட்டாட்சியா் (குடிமைப் பொருள்), வட்ட வழங்கல் அலுவலரால் குறைதீா் முகாம் டிசம்பா் 14(சனிக்கிழமை) நடத்தப்படவுள்ளது.
முகாமில், குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்களைப் பதிவு செய்ய கோருதல், கைப்பேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனு, முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் அங்கீகாரச் சான்று கோரி மனு, பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்த புகாா்கள், தனியாா் சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருள்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகாா்கள் ஆகியவற்றை குடிமைப்பொருள் வழங்கல் அலுவலா், தனி வட்டாட்சியரிடம் அளிக்கலாம்.
எனவே, விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் இந்த முகாம்களில் பங்கேற்று பயன்பெறலாம் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.