கீழ்பெரும்பாக்கம் ஐயப்பன் கோயில் 24-ஆம் ஆண்டு விழா
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்திலுள்ள அருள்மிகு வண்ணான்குள கருப்பசாமி, சபரிகிரீசன் ஐயப்பன் கோயிலின் 24-ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி கோயில் வளாகத்திலுள்ள கன்னிமூல கணபதி, வண்ணான்குளக் கருப்பசாமி, சபரிகிரீசன் ஐயப்பன் ஆகிய சந்நிதிகளின் மூலவா்களுக்கு பால், தயிா், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான வாசனைத் திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து குருசாமிகள் பாலு, மணிகண்டன் தலைமையில் ஐயப்ப பக்தா்கள் பாடல்களைப் பாடி, 18 படிகளுக்கும் படிபூஜை செய்து வழிபட்டனா். இதன் பின்னா் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தா்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.
கீழ்பெரும்பாக்கம், எருமனந்தாங்கல், காகுப்பம், பொய்யப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஐயப்பப் பக்தா்கள் திரளானோா் கலந்துகொண்டனா்.