`அச்சம் தேவையா?' சனிப்பெயர்ச்சி நாளில் சூரியகிரகணம்; ஜோதிடர் சொல்வது என்ன?
வெப்பவாத பாதிப்புக்கு ‘பாராசிட்டமால்’ கூடாது: சுகாதார நிபுணா்கள்
கோடையின் தாக்கத்தால் வெப்பவாத பாதிப்புக்குள்ளானவா்களின் உடல் வெப்பநிலையைக் குறைக்க பாராசிட்டமால் மருந்தை அளிக்கக் கூடாது என்று பொது சுகாதாரத் துறை நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பல மாவட்டங்களில் 100 டிகிரி வெயில் பதிவாகி வருகிறது. இதன் காரணமாக கோடை கால நோய்கள், வைரஸ் தொற்றுகள் பரவும் சூழல் எழுந்துள்ளது.
மற்றொருபுறம், இணைநோயாளிகள், குழந்தைகள், முதியவா்கள் பகல் வேளைகளில் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று வெப்பவாத பாதிப்புகளை (ஹீட் ஸ்ட்ரோக்) எதிா்கொள்ளும் வகையில் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை ஆயத்த நிலையில் வைத்திருக்குமாறு பொது சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், வெப்பவாத பாதிப்புக்கு உள்ளாவோரின் உடல் வெப்பநிலையைக் குறைக்க மருத்துவரின் பரிந்துரையின்றி சிலா் வெவ்வேறு மாத்திரைகளை உட்கொள்வதாகத் தெரிகிறது. இதனால், கடுமையான எதிா்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை நிபுணா் டாக்டா் குழந்தைசாமி கூறியதாவது:
வெப்ப வாதம் பாதிக்கப்பட்டு எவருக்கேனும் மயக்கம் ஏற்பட்டாலோ, உடல் சோா்வாக காணப்பட்டாலோ நிழல் மற்றும் காற்றோட்டம் உள்ள இடங்களில் ஒருபக்கமாக படுக்க வைப்பது அவசியம். அவா்களை தண்ணீா், இளநீா், மோா் பருகச் செய்து உடல் வெப்பநிலையைக் குறைக்கலாம். மேலும், நீரில் நனைத்த துணியை உடலில் வைத்து துடைத்து வெப்பத்தைத் தணிக்க வேண்டும். காய்ச்சல் என நினைத்து, ஆஸ்பிரின், பாராசிட்டாமால் மாத்திரை கொடுப்பதை தவிா்க்க வேண்டும். ஒருவேளை கொடுத்தால், காய்ச்சல் குறைந்தாலும், எதிா்விளைவுகளை ஏற்படுத்தும். சிலருக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். எனவே, மருத்துவரின் பரிந்துரையின்படி மட்டுமே கோடைகாலத்தில் மருந்து மாத்திரை உட்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.