வேங்கைவயல் வழக்கு மே 12-க்கு ஒத்திவைப்பு!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை வரும் மே 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீஸார், அதே கிராமத்தைச் சேர்ந்த காவலர் முரளிராஜா மற்றும் முத்துக்கிருஷ்ணன், சுதர்சன் ஆகிய 3 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
இதைத் தொடா்ந்து, கடந்த மாா்ச் 12 ஆம் தேதி குற்றவியல் நடுவர் மன்றத்தில் அவர்கள் மூன்று பேருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டு, மார்ச் 20-க்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
அப்போது எங்களுக்கும் இச்சம்பவத்துக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்பதால், வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என மூவரும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இதற்குப் பதிலளிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஏப். 3-க்கு ஒத்திவைத்தது.
தொடர்ந்து, ஆதாரங்கள் வலுவாக இருப்பதால், அவர்களை விடுவிக்கக் கூடாது என சிபிசிஐடி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, இவ்வழக்கு இன்று(ஏப். 23) புதன்கிழமை புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் மன்றம் எண் 2-இல் விசாரணைக்கு வந்தது.
குற்றம்சாட்டப்பட்ட மூவரும் ஆஜரான நிலையில், இவ்வழக்கு விசாரணையை வரும் மே 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவர் ஜி. அற்புதவாணன் உத்தரவிட்டார்.
இதையும் படிக்க: பயங்கரவாத தாக்குதல்: திருமணமான 7 நாள்களில் கடற்படை அதிகாரி பலியான சோகம்!